Published : 16 Jun 2025 12:00 AM
Last Updated : 16 Jun 2025 12:00 AM
வாஷிங்டன்: இந்தியா - பாகிஸ்தான் இடையே என்னுடைய தலையீட்டால் அமைதி ஏற்பட்டதைப் போல விரைவில் இஸ்ரேல் - ஈரான் இடையே அமைதி ஏற்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்ரூத் சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது: “ஈரானும் இஸ்ரேலும் ஒரு ஒப்பந்தத்துக்கு வரவேண்டும். இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கும் இடையே, அமெரிக்காவுடனான வர்த்தகத்தைப் பயன்படுத்தி, விரைவாக ஒரு நல்ல முடிவை எடுத்து, போரை நிறுத்த முடிந்த இரண்டு சிறந்த தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு ஒற்றுமையை நான் கொண்டு வந்தேன்.
மேலும், எனது முதல் பதவிக் காலத்தில், செர்பியாவுக்கும் கொசோவோவுக்கும் இடையே பல தசாப்தங்களாகச் நடந்து கொண்டிருந்ததைப் போல, கடுமையான மோதல் நடந்து கொண்டிருந்தது. இந்த நீண்டகால மோதல் பெரும் போராக வெடிக்கத் தயாராக இருந்தது. நான் அதை தடுத்து நிறுத்தினேன் (சில முட்டாள்தனமான முடிவுகளால் பைடன் நீண்டகால வாய்ப்புகளை பாதித்துள்ளார். ஆனால் நான் அதை மீண்டும் சரிசெய்வேன்)
எகிப்து மற்றும் எத்தியோப்பியா இடையே நைல் நதிக்கு நடுவே அணைக்காக கடும் சண்டை நடந்தது. எனது தலையீட்டால் குறைந்தபட்சம் இப்போது அங்கு அமைதி நிலவுகிறது. அது அப்படியே நீடிக்கும். அதேபோல், இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையில் விரைவில் அமைதி ஏற்படும். இப்போது பல அழைப்புகளும் சந்திப்புகளும் நடக்கின்றன. நான் நிறைய செய்கிறேன், எதற்கும் ஒருபோதும் பேர் கிடைப்பதில்லை. ஆனால் அது பரவாயில்லை. மக்கள் புரிந்துகொள்கிறார்கள். மத்திய கிழக்கை மீண்டும் சிறந்ததாக்குவோம்” இவ்வாறு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT