Last Updated : 13 Jun, 2025 07:21 PM

6  

Published : 13 Jun 2025 07:21 PM
Last Updated : 13 Jun 2025 07:21 PM

‘இஸ்ரேலின் அடுத்தகட்ட தாக்குதல் இன்னும் மோசமாக இருக்கும்...’ - ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை

வாஷிங்டன்: ஈரான் நாட்டின் ராணுவ தளங்கள் மற்றும் அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், எதிர்வரும் தாக்குதல்கள் இன்னும் மோசமானதாக இருக்கும் என்றும், எனவே விரைவாக ஒப்பந்தத்தை எட்டுமாறும் ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக சமூக ஊடகமான ட்ரூத் பக்கத்தில் டொனால்டு ட்ரம்ப் வெளியிட்டுள்ள பதிவில், "ஓர் ஒப்பந்தம் செய்வதற்கான வாய்ப்புகளை ஈரானுக்கு மீண்டும் மீண்டும் வழங்கினேன். அவர்களிடம் நான், "அதைச் செய்யுங்கள்" என்று வலுவான வார்த்தைகளில் சொன்னேன். எவ்வளவு கடினமாக முயற்சித்தாலும், எவ்வளவு நெருக்கமாக இருந்தாலும், அவர்களால் அதைச் செய்ய முடியவில்லை.

அவர்கள் அறிந்த, எதிர்பார்த்த அல்லது சொல்லப்பட்ட எதையும் விட இது மிகவும் மோசமாக இருக்கும் என்று அவர்களிடம் நான் சொன்னேன். அமெரிக்கா இதுவரை உலகின் சிறந்த மற்றும் மிகவும் ஆபத்தான ராணுவ உபகரணங்களைத் தயாரிக்கிறது. இவை இஸ்ரேலிடம் நிறைய உள்ளன. இன்னும் வரவிருக்கிறது. அவற்றை எப்படிப் பயன்படுத்துவது என்பது அவர்களுக்கு (இஸ்ரேல்) தெரியும்.

சில ஈரானிய கடும்போக்காளர்கள் துணிச்சலுடன் பேசினார்கள். ஆனால் என்ன நடக்கப் போகிறது என்று அவர்களுக்குத் தெரியாது. தற்போது அவர்கள் அனைவரும் இறந்துவிட்டார்கள். நிலைமை இன்னும் மோசமாகிவிடும். ஏற்கெனவே ஈரான் மிகப் பெரிய மரணங்களையும் அழிவையும் சந்தித்துள்ளது. ஆனால், அடுத்த திட்டமிடப்பட்ட தாக்குதல்கள் இன்னும் கொடூரமானவையாக இருப்பதால், இந்தப் படுகொலையை முடிவுக்குக் கொண்டுவர இன்னும் நேரம் இருக்கிறது.

ஈரானியப் பேரரசு என்று அழைக்கப்பட்டதைக் காப்பாற்ற ஈரான் ஓர் ஒப்பந்தம் செய்ய வேண்டும். அது நடந்தால், இனி மரணம் இருக்காது, அழிவு இருக்காது, அதைச் செய்யுங்கள். காலம் கடந்துவிடும் முன்பு அதைச் செய்யுங்கள். கடவுள் உங்கள் அனைவரையும் ஆசிர்வதிப்பாராக!" என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இன்று (ஜூன் 13) ஈரான் தலைநகர் தெஹ்ரான் மீது வான்வழி தாக்குதலை தொடுத்தது இஸ்ரேல். இதில் தெஹ்ரான் நகரில் உள்ள குடியிருப்புகள் உட்பட பல்வேறு கட்டிடங்கள் சிதிலமடைந்தன. இந்த தாக்குதலை அடுத்து ஈரான் வான்வெளி மூடப்பட்டது. இதை ஈரான் நாட்டின் அரசு ஊடக நிறுவனமான ஐஆர்என்ஏ உறுதி செய்தது. வான்வழி தாக்குதல் மட்டுமல்லாது இஸ்ரேலின் மொஸாட் (MOSSAD) அமைப்பும் ஈரானில் தாக்குதல் நடவடிக்கை மேற்கொண்டதாக இஸ்ரேல் ராணுவ வானொலி தெரிவித்தது. இந்த தாக்குதலில் ஈரான் நாட்டின் ராணுவ தளபதிகள், வீரர்கள் மற்றும் அணுசக்தி விஞ்ஞானிகள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இதில் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர ராணுவ அதிகாரி ஹுசைன் சலாமி உயிரிழந்திருப்பதாவும் தகவல் வெளியாகி உள்ளது. இது மிகப் பெரிய அளவில் நடத்தப்பட்ட தாக்குதல் என சர்வதேச செய்திகளை வெளியிடும் ஊடக நிறுவனங்கள் கூறியுள்ளன. அடுத்து என்ன செய்யலாம் என ஈரான் தரப்பில் முடிவெடுக்க கூடிய முக்கியஸ்தர்கள் இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தத் தாக்குதலை தன்னிச்சையாக நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதை இஸ்ரேலின் ஐநா தூதர் டேனி டானன் கூறியுள்ளார். அணுசக்தி நிலையம் தாக்கப்பட்டு இருந்தாலும் அதிலிருந்து கதிர்வீச்சு வெளியேற்றம் எதுவும் இதுவரை பதிவாகவில்லை என சர்வதேச அணுசக்தி நிறுவன அமைப்பு கூறியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x