Published : 12 Jun 2025 09:18 AM
Last Updated : 12 Jun 2025 09:18 AM
வாஷிங்டன்: “மஸ்க் வருத்தம் தெரிவித்திருப்பது நன்று. அவர் மீது நான் எந்தக் குறையும் சொல்லப்போவதில்லை. ஆனால் நான் சற்று ஏமாற்றமடைந்தேன்.” என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது சமூகவலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சரியாக ஒருவார காலத்துக்கு முன் பரஸ்பரம் விமர்சனங்களைத் தெறிக்கவிட்ட ட்ரம்ப் - மஸ்க் தற்போது ஆவேசம் தனிந்த கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.
ஏற்கெனவே ட்ரம்ப் - மஸ்க் மோதலில் வார்த்தைகள் தடித்தபோது, பள்ளிக் குழந்தைகள் மோதலைப் போல் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், ஒரே வாரத்தில் இருவரும் சமரச பாதைக்கு திரும்பியதும் பகடிக்குள்ளாகி இருக்கிறது. ‘ஒரு வல்லரசின் அதிபரும், ஒரு பெரும் பணக்காரரும் கேலிக்கூத்து செய்கின்றனர்’ என்று நெட்டிசன்கள் நகையாடி வருகின்றனர்.
மஸ்க் Vs ட்ரம்ப் - நடந்தது என்ன? அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிர்வாகத்தில் அரசு செலவுகளை குறைக்கும் செயல்திறன் துறையை (டிஓஜிஇ - DOGE) தொழிலதிபர் எலான் மஸ்க் கவனித்து வந்தார். ஆனால், அவரது துறையின் பரிந்துரைகள் அமெரிக்க அரசின் பட்ஜெட் மசோதாவில் இடம்பெறவில்லை. மாறாக அதில் வரிச்சலுகைகள், அமெரிக்க ராணுவத்துக்கு கூடுதல் நிதி, மின் வாகனங்களுக்கான மானியம் ரத்து போன்றவை இடம் பெற்றிருந்தது. இதனால் ஏமாற்றம் அடைந்த எலான் மஸ்க் அதிபர் ட்ரம்ப் நிர்வாகத்தில் இருந்து வெளியேறினார்.
பரஸ்பர தாக்கு: அதன்பின் அதிபர் ட்ரம்ப் செயல்பாடுகள் குறித்து விமர்சிக்கத் தொடங்கினார். “மிகப் பெரிய அருமையான பட்ஜெட்” என கிண்டலடித்த எலான் மஸ்க், பின்னர் இது அருவறுப்பான பட்ஜெட் எனவும் குறிப்பிட்டார். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீது பதவி நீக்க தீர்மானம் கொண்டு வந்து பொறுப்பை துணை அதிபர் ஜே.டி.வான்ஸிடம் ஒப்படைக்க வேண்டும் என சமூக ஊடகத்தில் ஒருவர் தெரிவித்த கருத்துக்கும் ‘ஆமாம்’ என எலான் மஸ்க் பதிவிட்டார்.
“எலான் மஸ்க் நிறுவனங்களுடனான அமெரிக்க அரசின் ஒப்பந்தத்தையும், மானியத்தையும் நிறுத்தினால், அமெரிக்க பட்ஜெட்டில் பல லட்சம் கோடி மிச்சமாகும்” என அதிபர் ட்ரம்ப் மிரட்டல் விடுத்தார். இதையடுத்து “அதிபர் ட்ரம்ப் நன்றி கெட்டவர். நான் ஆதரவு அளிக்கவில்லை என்றால் அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் ஜெயித்திருக்க முடியாது” என எலான் மஸ்க் கூறினார்.
மேலும் அதிபர் ட்ரம்ப்-ஐ, சட்டவிரோத பாலியல் வழக்கில் சிக்கி தற்கொலை செய்த ஜெப்ரி எப்ஸ்டீனுடன் அதிபர் ட்ரம்ப்புக்கு தொடர்பு உள்ளது எனக் கூறி அவருடன், ட்ரம்ப் இருக்கும் பழைய வீடியோ ஒன்றையும் எலான் மஸ்க் பகிர்ந்தார். இதனால் எலான் மஸ்க் மீது வெறுப்படைந்த அதிபர் ட்ரம்ப், “இனிமேல் எலான் மஸ்க்குடன் பேசும் எண்ணம் எனக்கு இல்லை” எனக் கூறினார்.
இந்நிலையில், திடீர் திருப்பமாக எலான் மஸ்க், எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள தகவலில், “அதிபர் ட்ரம்ப் பற்றி கொஞ்சம் அதிகமாக விமர்சித்துவிட்டேன், வருந்துகிறேன்” என தெரிவித்தார். அதனை ஏற்றுக் கொள்வது போல், “மஸ்க் வருத்தம் தெரிவித்திருப்பது நன்று. அவர் மீது நான் எந்தக் குறையும் சொல்லப்போவதில்லை. ஆனால் நான் சற்று ஏமாற்றமடைந்தேன்.” என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT