Published : 12 Jun 2025 06:41 AM
Last Updated : 12 Jun 2025 06:41 AM
டாக்கா: “பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு வங்கதேச இடைக்கால ஆலோசகர் முகமது யூனுஸ் ஆதரவு அளிக்கிறார்” என்று வங்கதேச மாணவர் லீக் தலைவர் சதாம் உசேன் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.
வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு கவிழ்க்கப்பட்ட பிறகு, நாட்டின் இடைக்கால அரசுக்கு ஆலோசகராக முகமது யூனுஸ் நியமிக்கப்பட்டார். இதுகுறித்து அவாமி லீக் கட்சியின் வங்கதேச மாணவர் லீக் தலைவர் சதாம் உசேன் அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது:
கடந்த 1971-ம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடந்த போரை முகமது யூனுஸ் மறந்துவிட்டார். பாகிஸ்தானுடன் நெருக்கம் காட்டுவதன் மூலம் வங்கதேச சுதந்திர போராட்டத்தை அவர் குறைத்து மதிப்பிட்டுள்ளார். வரலாற்றை அழிக்கும் வகையில் யூனுஸ் செயல்பட்டு கொண்டிருக்கிறர்.
பாகிஸ்தானுடன் அவர் நெருக்கமாகி வருவதை பொறுத்துக் கொள்ள முடியாது. அத்துடன் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ மற்றும் தீவிரவாத அமைப்புகளுக்கு அவர் ஆதரவு அளிக்கிறார். இது வங்கதேசத்துக்கு மிகவும் அச்சுறுத்தலானது. கடந்த 1971-ல் நடைபெற்ற வங்கதேச சுதந்திரப் போராட்டம் மற்றும் உயிர்த்தியாகங்களை அவர் அவமதிக்கிறார்.
எங்கள் மண்ணில் இனப்படுகொலை நடத்திய நாடு பாகிஸ்தான். பாகிஸ்தானுடன் தொடர்புள்ள தீவிரவாத அமைப்புகள் ஜமாத் இ இஸ்லாம், ஹிஸ்ப் உத் தஹ்ரிர், அன்சருல்லா பங்கலா டீம், லஷ்கர் இ தொய்பா போன்ற அமைப்புகள், தற்போது வங்கதேச அரசின் ஆதரவை பெற்று வருகின்றன. பாகிஸ்தான் ஐஎஸ்ஐ அமைப்புடன் சேர்ந்து செயல்படுவதால், தற்போது சர்வதேச தீவிரவாதத்தின் இடமாக வங்கதேச மண் மாறி வருகிறது.
வங்கதேசத்தில் உள்ள சிறுபான்மையினர்களுக்கு குறிப்பாக இந்துக்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளன. இந்துக்கள் அச்சத்தில் வாழ்கின் றனர். கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதியில் இருந்து இதுவரை இந்துக்களை குறிவைத்து 2,200-க்கும் மேற்பட்ட வன்முறை சம்பவங்கள் பதிவாகி உள்ளன. இதில் இந்துக்களின் உயிரழிப்பு, அவர்களுடைய சொத்துகள் நாசமடைந்தது, கட்டாயமாக இருப்பிடத்தை விட்டு வெளியேற்றியது, கோயில்கள் மீது தாக்குதல் நடந்தது போன்ற சம்பவங்கள் எல்லாம் அடங்கும்.
இங்கு ஜனநாயகம் இல்லை. இங்கு பாசிச அரசு, மத அரசு நடைபெறுகிறது. அவாமி லீக் கட்சியால் மட்டும்தான் வங்கதேசத்தில் நிலையான ஆட்சியை வழங்க முடியும். மதச்சார்பற்ற வங்கதேச அரசை கொண்டு வரமுடியும். இவ்வாறு வங்கதேச மாணவர் லீக் தலைவர் சதாம் உசேன் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT