Published : 12 Jun 2025 12:56 AM
Last Updated : 12 Jun 2025 12:56 AM

கப்பலில் இருந்து மாலுமிகள் மீட்பு: இந்தியாவுக்கு சீனா நன்றி

பெய்ஜிங்: இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து கடந்த 7-ம் தேதி புறப்பட்ட சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட சீன நிறுவனத்தின் எம்வி வான் ஹை 503 என்ற பெயர் கொண்ட சரக்கு கப்பல் மும்பைக்கு சென்று கொண்டு இருந்தது.

இந்தக் கப்பல் கேரள மாநிலம் கோழிக்கோடு - கண்ணூர் துறைமுகங்களுக்கு நடுவே நடுக்கடலில் வந்து கொண்டிருந்தபோது திடீரென தீப்பிடித்து எரிந்தது. பேய்பூர் கடல் பகுதியில் இருந்து வடக்கே 70 கடல் மைல் தொலைவில் இந்த சம்பவம் நடந்தது.

இது குறித்து கொச்சியில் உள்ள இந்திய கடல் கண்காணிப்பு மையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, இந்திய கடற்படையினரும், கடலோர காவல்படையினரும் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த கப்பலில் 22 பேர் இருந்த நிலையில், அதில் 18 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

இவர்களில் 14 பேர் சீனாவை சேர்ந்தவர்கள். கப்பலில் இருந்தவர்களில் 4 பேரை மட்டும் காணவில்லை. அவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாலுமிகளை மீட்ட இந்திய கடற்படைக்கு சீன அரசு நன்றி தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக இந்தியாவுக்கான சீன தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் யு ஜிங் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கப்பலில் இருந்த 22 பேரில் 14 பேர் சீனர்கள். 6 பேர் தைவானைச் சேர்ந்தவர்கள். உடனடியாக நடவடிக்கை எடுத்து அவர்களை பத்திரமாக மீட்ட இந்திய கடற்படைக்கும், மும்பை கடலோர காவல்படைக்கும் எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும், மீட்பு நடவடிக்கைகள் வெற்றிகரமாக முடியவும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதனிடையே இந்த கப்பலில் ஏற்பட்ட தீயில் 40 சதவீதம் அணைக்கப்பட்டு விட்டதாக இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படையினர் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x