Last Updated : 11 Jun, 2025 10:29 PM

3  

Published : 11 Jun 2025 10:29 PM
Last Updated : 11 Jun 2025 10:29 PM

‘எங்களுக்கு அரிய தனிமங்கள், அவர்களுக்கு மாணவர் விசா’ - சீனா உடனான ட்ரம்ப் டீல்

அமெரிக்க அதிபர் டொனல்டு ட்ரம்ப், சீன அதிபர் ஜீ ஜின்பிங்

வாஷிங்டன்: அமெரிக்காவுக்கு காந்தம் மற்றும் அரிய பூமித் தனிமங்களை சீனா வழங்கும் என்றும், அதற்கு பதிலாக அந்நாட்டு மாணவர்கள் அமெரிக்க கல்வி நிறுவனங்களில் உயர் கல்வி பயில்வதற்கான விசா வழங்கப்படும் என்றும் அமெரிக்க அதிபர் டொனல்டு ட்ரம்ப் கூறியுள்ளார்.

அமெரிக்கா மற்றும் சீனா இடையேயான வர்த்தக ரீதியான உறவு தொடர்பாக லண்டனில் புதன்கிழமை அன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்ட நிலையில் அதிபர் ட்ரம்ப் இதை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனக்கு சொந்தமான ‘ட்ரூத் சோஷியல்’ சமூக வலைதளத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

“சீனா உடனான வர்த்தக ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டது. இப்போது அதற்கு நானும், அதிபர் ஜீ ஜின்பிங்கும் இறுதி ஒப்புதல் வழங்க வேண்டியுள்ளது. காந்தம் மற்றும் அரிய தனிமங்களை சீனா அமெரிக்காவுக்கு வழங்கும். அதேபோல அமெரிக்க கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் சீன மாணவர்கள் கல்வி பயில விசா வழங்கப்படும்.

இந்த ஒப்பந்தம் மூலம் அமெரிக்காவுக்கு மொத்தமாக 55 சதவீத வரிவிதிப்பு மூலம் வருவாய் கிடைக்கும்.சீனா 10 சதவீதம் பெறும். இருநாட்டுக்கும் இடையிலான வர்த்தக உறவு சிறப்பாக உள்ளது. இந்த விவகாரத்தில் எல்லோரும் கவனம் செலுத்தியமைக்கு நன்றி!” என அந்த பதிவில் ட்ரம்ப் கூறியுள்ளார்.

பின்னணி என்ன? - அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிடையே வரிவிதிப்புகளை மேற்கொண்டார். சீனா மீது 34 சதவீத வரியை விதித்தார். இதனையடுத்து, அமெரிக்கா மீது சீனாவும் வரியை விதித்தது. இந்த வரிப்போரானது, சீனா மீது அமெரிக்கா 145 சதவீதமும், அமெரிக்கா மீது சீனா 125 சதவீத வரியும் உயர்த்தும் அளவுக்கு கொண்டு சென்றது. இதனால், உலகளவிய பங்குச்சந்தைகள் வெகுவாக பாதிக்கப்பட்டன.

இறுதியாக, இரு நாடுகளும் 90 நாள்களுக்கு வரிவிதிப்பை ஒத்திவைப்பதாக பரஸ்பர ஒப்பந்தம் மேற்கொண்டன. இதைத் தொடர்ந்து, இரு நாடுகளின் தலைவர்கள் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட முடிவு செய்தனர். இதன் ஒரு பகுதியாக, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், சீன அதிபர் ஜீ ஜின்பிங் ஆகியோர் கடந்த வியாழக்கிழமை தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு பேசினர்.

இது தொடர்பாக அதிபர் ட்ரம்ப் கூறும்போது, “எங்களிடையேயான உரையாடல் மிக நேர்மறையாக நடந்து முடிந்தது” என்று தெரிவித்தார். மேலும், அமெரிக்க - சீன அதிகாரிகள் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார்கள் என்றும் ட்ரம்ப் கூறினார். அதன்படி, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளிடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தை லண்டன் நகரில் நடந்தது.

பேச்சுவார்த்தை நிறைவடைந்ததை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக், “கடந்த மாதம் ஜெனீவாவில் எட்டப்பட்ட ஒப்பந்தம், மூன்று இலக்கத்தை எட்டிய இருதரப்பு பழிவாங்கும் வரிகளை குறைக்க உதவியது. எனினும், முக்கியமான கனிம ஏற்றுமதிகளில் சீனா தொடர்ந்து கட்டுப்பாடுகளை விதித்ததால் ஜெனீவா ஒப்பந்தம் தடுமாறியது. இதனால், ட்ரம்ப் நிர்வாகம் சீனாவுக்கு குறைக்கடத்தி வடிவமைப்பு மென்பொருள், விமானங்கள் மற்றும் பிற பொருட்களை ஏற்றுமதி செய்வதைத் தடுக்க கட்டுப்பாடுகளை விதித்தது.

லண்டனில் தற்போது எட்டப்பட்டுள்ள ஒப்பந்தம் சமீபத்திய அமெரிக்க ஏற்றுமதி கட்டுப்பாடுகளில் சிலவற்றை நீக்கும். ஒருமித்த கருத்தையும் இரு நாடுகளின் அதிபர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தையை செயல்படுத்துவதற்கான ஒரு கட்டமைப்பை நாங்கள் அடைந்துள்ளோம். நாங்கள் திரும்பிச் சென்று அதிபர் ட்ரம்ப்பிடம் பேசி இதை அங்கீகரிப்பதை உறுதிசெய்வோம். அதேபோல், அவர்கள் திரும்பிச் சென்று அதிபர் ஜி ஜின்பிங்கிடம் பேசி அவரது அங்கீகாரத்தை உறுதிசெய்வார்கள். அது அங்கீகரிக்கப்பட்டால், நாங்கள் தற்போது எட்டியுள்ள திட்டத்தை செயல்படுத்துவோம்” என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x