Last Updated : 11 Jun, 2025 08:36 PM

2  

Published : 11 Jun 2025 08:36 PM
Last Updated : 11 Jun 2025 08:36 PM

நிருபர் மீது பாய்ந்த ரப்பர் புல்லட்! - ட்ரம்ப் ஆட்சியில் மோசமாகும் ஊடக சுதந்திரம்?

லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும் சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றுவதற்கு எதிரான போராட்டத்தில் ஆஸ்திரேலிய நிருபர் ஒருவரை போலீஸ் அதிகாரி குறிவைத்து சுட்டதில் அவர் காயமடைந்துள்ளார். ரப்பர் புல்லட் தான் என்றாலும் கூட செய்தி சேகரிக்கச் சென்றவருக்கு நேர்ந்த அநீதி, அமெரிக்காவில் ட்ரம்ப் ஆட்சியில் பத்திரிகை சுதந்திரமும் மோசமாகி உள்ளதை உணர்த்துவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

நடந்தது என்ன? - லாஸ் ஏஞ்சல்ஸ் போராட்டக் களத்தில் ஆஸ்திரேலியாவின் சேனல் 9-ன் பெண் செய்தியாளர் லாரன் தாமஸ், நேரலையில் செய்தி வழங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவர், “இங்கு போராட்டக் களத்தில் இருப்போரை போலீஸார் ரப்பர் குண்டுகளைப் பயன்படுத்தி கலைத்து வருகின்றனர்.” என்று கூறுகிறார். அவர் கூறிமுடிக்கும் தருணம் அவரை ஒரு போலீஸ்காரர் குறிவைப்பதைக் கவனித்த கேமராமேன் கேமராவை அந்தப் பக்கம் திருப்ப, மின்னல் வேகத்தில் புல்லட் பாய்ந்து பெண் நிருபரை தாக்குகிறது. காலில் காயம் ஏற்பட்டு அவர் பதறும் காட்சிகள் பதிவாகியுள்ளது. வீடியோ ஆதாரத்தின்படி பெண் நிருபர் மீது நடந்தது தவறுதலான கிராஸ் ஃபயரிங் துப்பாக்கிச் சூடு அல்ல, திட்டமிட்டு அந்த போலீஸ்காரர் நிகழ்த்தியது என்பது தெளிவாகத் தெரிகிறது.

இந்த வீடியோ ஊடகங்கள், சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது. லாரன் தாமஸ் மீதான தாக்குதலுக்கு முன்னதாகவே, ட்ரம்ப்பின் சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றும் நடவடிக்கை பற்றி செய்தி வெளியிட்ட இரண்டு நிருபர்கள் தாக்குதலுக்கு உள்ளாகியும் இங்கே சுட்டிக்காட்டத்தக்கது. லா டெய்லி நியூஸ் பத்திரிகையின் செய்தியாளர் ஒருவர் மூன்று தினங்களுக்கு முன்னர் பெப்பர் குண்டு, கண்ணீர் குண்டு மூலம் தாக்கப்பட்டார். பிரிட்டிஷ் புகைப்பட நிருபர் நிக் ஸ்டெர்ன், அவரது காலில் பாய்ந்த மூன்று அங்குல ப்ளாஸ்டிக் புல்லட்டை அப்புறப்படுத்த அவசர அறுவை சிகிச்சைக்கு உட்படுத்திக் கொண்டார்.

இவ்வாறாக, ட்ரம்ப் நிர்வாகத்துக்கு எதிராக செய்தி சேகரிப்போர் குறிவைத்து தாக்கப்படுவதாக லாஸ் ஏஞ்சல்ஸ் பிரஸ் கிளப் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் 30 பத்திர்கையாளர்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. போர்முனைகளில் செய்தி சேகரிக்கும் பத்திரிகையாளர்கள் தாக்குதலுக்கு உள்ளாவது இயல்பே, ஆனால், ஜனநாயக ஆட்சி நடைபெறும் அமெரிக்காவில், பட்டப்பகலில் இதுபோல் பத்திரிகையாளர்கள் தாக்குதலுக்கு உள்ளாவது, சட்டத்தை தூக்கி நிறுத்துவோம் என்று உறுதியளித்தோர் பொறுப்பு என்னவானது என்ற கேள்வியை எழுப்புகிறது.

ட்ரம்ப் ஆட்சிப் பொறுப்பேற்ற ஐந்து மாதங்களில் ஊடகத்துக்கு எதிரான வன்முறை அதிகரித்துள்ளது என்பதே மூத்த பத்திரிகையாளர்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது. ட்ரம்ப் நிர்வாகம் ஒளிபரப்பாளர்களுக்கு பொது நிதியை தடுப்பது, ஊடகவியலாளர்கள் தகவல்களை அணுகுவதைத் தடுப்பது, சுயாதீன ஊடகங்களின் நம்பகத்தன்மையைக் குறைமதிப்புக்கு உட்படுத்துவது போன்ற கெடுபிடிகளை நிகழ்த்துவதாக மூத்த பத்திரிகையாளர்கள் விமர்சிக்கின்றனர். சர்வதேச சேவைகளான வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா (Voice of America), ரேடியோ ஃப்ரீ யூரோப் (Radio Free Europe) மற்றும் ரேடியோ ஃப்ரீ ஆசியா (Radio Free Asia) ஆகியவை நிதி குறைப்பால் மூடப்படும் அபாயத்தில் உள்ளன.

உலகின் மிகவும் மதிக்கப்படும் மற்றும் முக்கியமான செய்தி நிறுவனங்களில் ஒன்றான அசோசியேட்டட் பிரஸ், வெள்ளை மாளிகையை அணுகுவதிலிருந்தும், ட்ரம்பை பற்றிய செய்தி சேகரிப்பதிலிருந்தும் தடை செய்யப்பட்டுள்ளது. மெக்சிகோ வளைகுடாவின் பெயரை அமெரிக்க வளைகுடாவாக மாற்றுவதற்கான ட்ரம்ப்பின் உத்தரவை அப்பத்திரிகை கடுமையாக எதிர்த்ததே அதற்குக் காரணம்.

அமெரிக்காவின் முக்கிய நெட்வொர்க்குகளான ABC, NBC மற்றும் CBS போன்றவற்றின் ஒளிபரப்பு உரிமங்கள் கூட பகிரங்கமாக அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன. இது, எதிர்காலத்தில் அரசியல் விசுவாசம் விரைவில் பத்திரிகை நேர்மையை விட அதிகமாக மதிக்கப்படும் என்பதற்கான சமிக்ஞையை ஊடக ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகங்களுக்குக் கடத்தும் விதமாகவே நிகழ்த்தப்படுகிறது.

ஊடக சுதந்திரத்தைப் பேண வேண்டிய கமிட்டியே, ஊடகங்களை கண்டிப்பது ரஷ்யா போன்ற நாடுகளில் தான் நடந்திருக்கும். அந்த கமிட்டியே கூட, “எச்சரிக்கை மணி: ட்ரம்ப்பின் 100 நாட்கள் ஊடக சுதந்திரம், ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல்” என்ற தலைப்பில் அறிக்கை வெளியிட்டது.

அமைதிக்கான தேவை! - ஊடக சுதந்திரம் முடக்கப்படுவது ஏன் கண்டிக்கப்பட வேண்டியது என்றால், அமெரிக்க ஜனநாயகத்தின் வெற்றி ஒற்றுமை சார்ந்ததாக மட்டும் இருந்ததில்லை. அது அதிகாரத்தை ஆய்வு செய்வதிலும், சவால் விடுவதிலும், சமரசமின்றி எதிர்ப்பதிலுமே இருந்திருக்கிறது. பேச்சு சுதந்திரத்தைப் பாதுகாக்கும் அமெரிக்க அரசியலமைப்பின் முதல் சட்டத் திருத்தத்தின்படி, பத்திரிகை சுதந்திரம் பேணப்படுவதே அரசின் முத்தாய்ப்பான தரமாகக் கருதப்படுகிறது. வெறும் பேச்சளவில் அதை நிறுத்திவிடாமல் செயல்படுத்திக் காட்டுவதே அந்த சட்டத் திருத்தம் வலியுறுத்துவது.

ஆனால், சர்வாதிகார நாடுகளை விமர்சிக்கப் பயன்படுத்தப்படும் பதங்கள், அமெரிக்காவை பற்றி மதிப்பீடுகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. உலகம் முழுவதும் ஜனநாயகம் அச்சுறுத்தலுக்கு ஆளாகும் நாடுகளை கண்காணிக்கும் சிவிகஸ் (Civicus) என்ற அமைப்பு, அமெரிக்காவை கண்காணிக்கப்படும் நாடுகள் பட்டியலில் சேர்த்துள்ளது. காங்கோ குடியரசு, இத்தலி, செர்பியா, பாகிஸ்தான் வரிசையில் அமெரிக்காவையும் கண்காணிப்பாதாகக் கூறியுள்ளது.

லாஸ் ஏஞ்சல்ஸில் பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல் அவர்களின் நிமித்தமாக மட்டுமல்ல், அமெரிக்க குடிமை கட்டமைப்பு சார்ந்தும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. பத்திரிகை சுதந்திரம் என்பது ஆடம்பரம் அல்ல; அது சமூக அமைதிக்கான அத்தியாவசியத் தேவை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x