Published : 07 Jun 2025 07:02 PM
Last Updated : 07 Jun 2025 07:02 PM
தெஹரான்: ஈரான் உட்பட 12 நாடுகளின் குடிமக்களுக்கு அமெரிக்கா பயணத் தடை விதித்திருப்பது, அந்நாட்டின் இனவெறி மனநிலையின் அடையாளம் என்று ஈரான் விமர்சித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது முதல் முறை பதவிக்காலத்தில் இருந்தே பயணத் தடை கொள்கையை அறிமுகப்படுத்தி வருகிறார். இரண்டாவது முறையாக பதவியேற்ற பிறகு தற்போது 12 நாடுகளுக்கு அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு அவர் தடை விதித்துள்ளார். அதற்கான பிரகடனத்தில் கடந்த புதன்கிழமை ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். அதன்படி, ஆப்கானிஸ்தான், மியான்மர் (பர்மா), சாட், காங்கோ குடியரசு, ஈக்வடோரியல் கினியா, எரித்திரியா, ஹைட்டி, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான் மற்றும் ஏமன் ஆகிய 12 நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளார்கள்.
இது தவிர புருண்டி, கியூபா, லாவோஸ், சியரா லியோன், டோகோ, துர்க்மெனிஸ்தான் மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு வரையறுக்கப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நாடுகள் "அதிக அளவிலான ஆபத்தை" ஏற்படுத்துபவை என குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த நாடுகளுக்கு நுழைவுத் தடை விதிக்கப்படவில்லை.
அமெரிக்க அதிபரின் புதிய பயண தடை உத்தரவு வரும் திங்கள்கிழமை நள்ளிரவு 12.01 மணிக்கு அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதனை ஈரான் கடுமையாக விமர்சித்துள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின் வெளிநாட்டு ஈரானியர்களின் விவகாரங்களுக்கான இயக்குநர் ஜெனரல் அலிரேசா ஹஷேமி-ராஜா, "அமெரிக்க கொள்கை வகுப்பாளர்களிடையே இருக்கும் மேலாதிக்க மற்றும் இனவெறி மனநிலையின் தெளிவான அடையாளம் இது.
இந்த முடிவு, அமெரிக்க கொள்கை வகுப்பாளர்கள், ஈரான் மற்றும் முஸ்லிம் மக்கள் மீது கொண்டுள்ள ஆழ்ந்த விரோதப் போக்கைக் காட்டுகிறது. சர்வதேச சட்டத்தின் அடிப்படைக் கொள்கைகளை இது மீறுகிறது. கோடிக்கணக்கான மக்கள், அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் அல்லது எந்த மதத்தைப் பின்பற்றுபவர்கள் என்பதன் அடிப்படையில் பயணிக்கும் உரிமையை இது பறிக்கிறது. இந்தத் தடை பாரபட்சமானது. தடைக்கான காரணம் பற்றி விரிவாகக் கூறாமல் தடை விதித்திருப்பது, அமெரிக்க அரசாங்கத்தின் சர்வதேசப் பொறுப்புக்கூறலை கேள்விக்கு உட்படுத்துகிறது" என தெரிவித்துள்ளார்.
1979 இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு ஈரானும் அமெரிக்காவும் தூதரக உறவுகளைத் துண்டித்துக்கொண்டன. அதுமுதல், இவ்விரு நாடுகளுக்கு இடையேயான உறவு மிகவும் மோசமாகவே இருந்து வருகிறது. வெளிநாடுகளில் வசிக்கும் ஈரானியர்கள், அதிகமாக இருப்பது அமெரிக்காவில்தான். அதுதான் அவர்களின் தாயகமாகும். ஈரானின் வெளியுறவு அமைச்சகத்தின் புள்ளிவிவரங்களின்படி, 2020-ஆம் ஆண்டில் அமெரிக்காவில் சுமார் 15 லட்சம் ஈரானியர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT