Last Updated : 07 Jun, 2025 06:05 PM

 

Published : 07 Jun 2025 06:05 PM
Last Updated : 07 Jun 2025 06:05 PM

209 ட்ரோன்கள், 9 ஏவுகணைகள்... - உக்ரைன் மீது ரஷ்யா சக்தி வாய்ந்த தாக்குதல் - பாதிப்பு என்ன?

கீவ்: ரஷ்ய எல்லைக்கு அருகில் உள்ள உக்ரைனின் மிகப் பெரிய நகரங்களில் ஒன்றான கார்கிவ் மீது, ரஷ்ய ராணுவம் நடத்திய மிகவும் சக்தி வாய்ந்த தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டதாகவும், 22 பேர் காயமடைந்ததாகவும் நகர மேயர் தெரிவித்துள்ளார். தங்கள் நாட்டுக்கு எதிராக ரஷ்யா ஒரே இரவில் 206 ட்ரோன்கள், 2 பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 7 பிற ஏவுகணைகளை ஏவியதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.

ரஷ்ய எல்லையில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது உக்ரைனின் மிகப் பெரிய நகரங்களில் ஒன்றான கார்கிவ். உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்த தொடங்கியதில் இருந்து இந்த நகரம் அதிகம் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்றிரவு இந்த நகரத்தின் மீது ரஷ்யா நடத்திய தாக்குதல் குறித்து தெரிவித்துள்ள கார்கிவ் நகர மேயர் இஹோர் டெரெகோவ், கிழக்கு உக்ரைன் நகரமான கார்கிவ் மீது இரவில் ட்ரோன்கள், ஏவுகணைகள் மற்றும் குண்டுகள் மூலம் ரஷ்யா தாக்குதல் நடத்தியதில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். ஒன்றரை மாத குழந்தை உட்பட 22 பேர் காயமடைந்தனர்.

முழு அளவிலான போர் தொடங்கியதிலிருந்து கார்கிவ் தற்போது மிகவும் சக்தி வாய்ந்த தாக்குதலை சந்தித்து வருகிறது. இரவு முழுவதும் நகரத்தில் டஜன் கணக்கான வெடிச்சத்தங்கள் கேட்டன. மேலும், ஏவுகணைகள், ட்ரோன்கள் மற்றும் வான்வழி குண்டுகளுடன் ரஷ்ய துருப்புக்கள் ஒரே நேரத்தில் தாக்கின. பல மாடி கட்டிடங்கள், தனியார் குடியிருப்புகள், கல்வி மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் ஆகியவை தாக்கப்பட்டன என்று தெரிவித்துள்ளார்.

கார்கிவ் ஆளுநர் ஓலே சினிஹுபோவ் கூறுகையில், “40 ட்ரோன்கள், ஒரு ஏவுகணை மற்றும் நான்கு குண்டுகளால் கார்கிவ் நகரில் உள்ள தொழில்துறை வளாகம் ஒன்று தாக்கப்பட்டது. இதன் காரணமாக அப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. மேலும் இடிபாடுகளுக்கு அடியில் இன்னும் மக்கள் இருக்கலாம்” என்று தெரிவித்தார்.

தங்கள் நாட்டுக்கு எதிராக ரஷ்யா ஒரே இரவில் 206 ட்ரோன்கள், 2 பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 7 பிற ஏவுகணைகளை ஏவியதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. உக்ரைனின் வான் பாதுகாப்பு பிரிவுகள் 87 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாகவும், மேலும், 80 ட்ரோன்கள் தொலைந்து போனதாகவும் உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, ரஷ்யாவின் முக்கிய 5 விமான படைத் தளங்கள் மீது உக்ரைன் ராணுவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரே நேரத்தில் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. ‘ஆபரேஷன் ஸ்பைடபர் வெப்’ என்ற ரகசிய குறியீடுடன் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் ரஷ்யாவின் அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கக் கூடிய 41 அதிநவீன போர் விமானங்கள் தீயில் எரிந்து நாசமாகின. அதன் தொடர்ச்சியாக, கிரைமியாவை ரஷ்யாவுடன் இணைக்கும் சாலை மற்றும் ரயில் பாதையை தகர்த்து விட்டோம் என்று உக்ரைன் ராணுவம் தெரிவித்தது. இந்தப் பின்னணியில், உக்ரைன் மீது ரஷ்யா சக்தி வாய்ந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளது கவனிக்கத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x