Last Updated : 07 Jun, 2025 01:01 PM

1  

Published : 07 Jun 2025 01:01 PM
Last Updated : 07 Jun 2025 01:01 PM

‘பஹல்காம் தாக்குதல் குறித்த பிரதமர் மோடியின் கருத்து அதிர்ச்சியளிக்கிறது’ - பாகிஸ்தான்

செனாப் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட இரும்பு பாலத்தை திறந்து வைத்த பிரதமர் நரேந்திர மோடி | நாள்: 06.06.2025

இஸ்லாமாபாத்: பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக ஜம்மு காஷ்மீரில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்த கருத்துக்கள் அதிர்ச்சி அளிக்கின்றன என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கைக்குப் பிறகு முதல்முறையாக நேற்று (வெள்ளிக்கிழமை) ஜம்மு காஷ்மீர் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, செனாப் ஆற்றின் குறுக்கே 1,315 மீட்டர் நீளத்துக்கு அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக உயரமான ரயில்வே இரும்பு வளைவுப் பாலத்தையும், செனாப் நதியின் கிளை நதியான ஆஞ்சி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள நாட்டின் முதல் கேபிள் ரயில் பாலத்தையும் திறந்துவைத்தார். மேலும், கத்ரா பகுதியில் ரூ.46,000 கோடி மதிப்புள்ள வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி உரையாற்றினார்.

அப்போது, "துரதிர்ஷ்டவசமாக, நமது அண்டை நாடு மனிதகுலத்துக்கு எதிரானது, ஏழைகளின் வாழ்வாதாரத்துக்கும் கூட எதிரானது. ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் நடந்தது இதற்கு ஓர் எடுத்துக்காட்டு. பஹல்காமில் மனிதநேயம் மற்றும் காஷ்மீர் பெருமிதம் ஆகிய இரண்டின் மீதும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இந்தியாவில் கலவரங்களை ஏற்படுத்துவதும், காஷ்மீர் மக்களின் வருவாயைத் தடுப்பதும் இதன் நோக்கமாகும். அதனால்தான் காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகளை பாகிஸ்தான் தாக்கியது. காஷ்மீர் குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தை ஈட்டித் தரும் சுற்றுலாவை பாகிஸ்தான் குறிவைத்தது.

சரியாக ஒரு மாதத்திற்கு முன்பு, மே 6-ஆம் தேதி இரவு, பாகிஸ்தான் தனது அழிவு நாளைக் கண்டது. இப்போது, ​​ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரைக் கேட்கும்போதெல்லாம், பாகிஸ்தான் தனது அவமானகரமான தோல்வியை நினைவுகூரும். பாகிஸ்தானுக்குள் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் உள்ள பயங்கரவாதிகளை இந்தியா தாக்கும் என்று பாகிஸ்தான் ராணுவமும் பயங்கரவாதிகளும் ஒருபோதும் நினைத்திருக்க மாட்டார்கள்" என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் இந்த கருத்துக்களுக்கு மறுப்பு தெரிவித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதாக இந்தியப் பிரதமர் மீண்டும் ஒருமுறை குற்றம் சாட்டி இருப்பது எங்களுக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. எவ்வித நம்பகமான ஆதாரங்களையும் முன்வைக்காமல் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு இது.

சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய பிரதேசமாகவே ஜம்மு-காஷ்மீர் உள்ளது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்கள் மற்றும் காஷ்மீர் மக்களின் விருப்பத்தின்படி இந்த சர்ச்சை தீர்க்கப்பட வேண்டும். இந்த சட்ட மற்றும் வரலாற்று யதார்த்தத்தை எந்த விதமான சொல்லாடல்களாலும் மாற்ற முடியாது.

ஜம்மு காஷ்மீரில், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது, அடிப்படை சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது, சர்வதேச சட்டத்தை மீறி பிராந்தியத்தின் மக்கள்தொகையை மாற்றுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இந்த பின்னணியில் ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சி குறித்த கூற்றுக்கள் வெற்றுத்தனமானவை.

ஜம்மு காஷ்மீர் மக்களின் உரிமைகள் மற்றும் கண்ணியத்திற்கான நியாயமான போராட்டத்திற்கு பாகிஸ்தான் கொள்கை ரீதியில் ஆதரவை தொடர்ந்து வழங்கி வருகிறது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களின் அடிப்படையில் ஜம்மு காஷ்மீர் தனது சுயநிர்ணய உரிமையை பயன்படுத்த இந்தியா அனுமதிப்பதை, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் மனித உரிமை அமைப்புகள் உட்பட சர்வதேச சமூகம், உறுதிப்படுத்த வேண்டும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x