Published : 07 Jun 2025 10:12 AM
Last Updated : 07 Jun 2025 10:12 AM
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனல்டு ட்ரம்ப், தொழிலதிபர் எலான் மஸ்க் இடையே ஏற்பட்டுள்ள மோதல் பொதுவெளியில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்நிலையில், ‘புத்தி இல்லாதவர் உடன் பேசத் தயாராக இல்லை’ என மஸ்க்கை குறிப்பிட்டு ட்ரம்ப் பேசியுள்ளார். இதை ஊடக நிறுவனம் ஒன்றுடனான தொலைபேசி நேர்காணலில் அவர் தெரிவித்துள்ளார்.
இருவருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் இருவரும் தொலைபேசி வழியிலான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக வெளியான தகவல் குறித்து இந்த நேர்காணலில் அதிபர் ட்ரம்ப் வசம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதில் அளித்தார்.
“அந்த புத்தி இல்லாத மனிதர் குறித்து சொல்கிறீர்களா. அவருடன் பேச எனக்கு அறவே ஆர்வமில்லை. மஸ்க் தான் என்னுடன் பேச விரும்புகிறார். ஆனால், நான் தயாராக இல்லை” என அதிபர் டொனல்டு ட்ரம்ப் கூறியுள்ளார்.
இதற்கிடையே ட்ரம்ப் மற்றும் மஸ்க் தங்கள் பகையை முறித்துக் கொண்டு சுமுகமாக வேண்டும் என குடியரசு கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். அமெரிக்காவில் புதிய அரசியல் கட்சி தொடங்குவது குறித்து மக்கள் கருத்தை எக்ஸ் தளத்தில் மஸ்க் நேற்று கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
பின்னணி என்ன? - அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம்ப் போட்டியிட்டதில் இருந்தே அவரது தீவிர ஆதரவாளராக இருந்தவர் தொழிலதிபர் எலான் மஸ்க். ட்ரம்ப் மீண்டும் அதிபர் ஆனதும், அமெரிக்க அரசின் செலவினங்களை குறைப்பதற்காக உருவாக்கப்பட்ட துறையை எலான் மஸ்க் கவனித்தார்.
இந்நிலையில், அமெரிக்க அரசின் பட்ஜெட் தயாரானது. இதில் எலான் மஸ்க் தலைமையிலான குழு பரிந்துரைந்த விஷயங்கள் இடம் பெறவில்லை. ஏராளமான வரிச்சலுகைகள், அமெரிக்க ராணுவ செலவினங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு , மின்சார வாகனங்களுக்கான 7,500 டாலர் மானியம் ரத்து போன்ற அம்சங்களால், எலான் மஸ்க் ஏமாற்றம் அடைந்தார். இதனால் அவர் ட்ரம்ப் நிர்வாகத்தில் இருந்து விலகும் அறிவிப்பை வெளியிட்டார். அதிபர் ட்ரம்ப்பின் பட்ஜெட் குறித்தும் விமர்சித்தார்.
இதற்கு சமூக ஊடகத்தில் பதில் அளித்த அதிபர் ட்ரம்ப், “மின்சார வாகனங்களுக்கான மானியம் பட்ஜெட்டில் ரத்து செய்வதால், எலான் மஸ்க் கோபம் அடைந்துள்ளார். பட்ஜெட்டில் பல லட்சம் பணத்தை சேமிப்பதற்கான ஒரே வழி எலான் மஸ்க் நிறுவனங்களுக்கு வழங்கும் மானியங்களையும், அமெரிக்க அரசு செய்துள்ள ஒப்பந்தங்களையும் நிறுத்துவதுதான்.” என எலான் மஸ்க்குக்கு மிரட்டல் விடுத்தார். இந்த வார்த்தை மோதல் நீண்டு கொண்டே செல்கிறது.
வெள்ளை மாளிகையில் சுதந்திரமாக திரிந்த தொழிலதிபர் எலான் மஸ்க்குக்கு, அதிபர் ட்ரம்ப்புடன் இந்தளவு கருத்து வேறுபாடு ஏற்படும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. இருவர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக 150 மடங்கு லாபத்தில் விற்ற, எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் ஒரே நாளில் 14 சதவீதம் வீழ்ந்தது. இதனால் முதலீட்டாளர்களுக்கு சுமார் ரூ.1 லட்சத்து 28 ஆயிரத்து 621 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. டெஸ்லா கார் நிறுவனத்தின் ஆண்டு லாபம் 1.2 பில்லியன் டாலர் அளவுக்கு குறையலாம் என கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT