Last Updated : 03 Jun, 2025 04:34 PM

 

Published : 03 Jun 2025 04:34 PM
Last Updated : 03 Jun 2025 04:34 PM

துருக்கியில் 5.8 ரிக்டரில் நிலநடுக்கம்: அச்சத்தில் வெளியேறியபோது சிறுமி உயிரிழப்பு; 70 பேர் காயம்

அங்கரா: துருக்கியில் இன்று அதிகாலை 2.17 மணிக்கு 5.8 ரிக்டரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தொடர்ச்சியாக நிலவிய அச்சம் காரணமாக வீடுகளை விட்டு வெளியேறியபோது, 14 வயது சிறுமி உயிரிழந்தார். சுமார் 70 பேர் காயமடைந்தனர்.

துருக்கியின் மேற்குப் பகுதியில் மத்திய தரைக்கடலை ஒட்டிய விடுமுறை வாசஸ்தலமான மர்மாரிஸுக்கு அருகில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து துருக்கியின் பேரிடர் மற்றும் அவசரநிலை மேலாண்மைத் தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "மத்திய தரைக்கடலில், விடுமுறை வாசஸ்தலமான மர்மாரிஸுக்கு அருகில் அதிகாலை 2:17 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. கிரேக்க தீவான ரோட்ஸ் உட்பட அருகில் உள்ள பகுதிகளில் இது உணரப்பட்டது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து, தூக்கத்தில் இருந்த பலரும் அலறி அடித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்துள்ளனர். இது குறித்து தெரிவித்த அதிகாரிகள், "துருக்கியின் கடலோர நகரத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது குடியிருப்பாளர்களிடையே பீதியை ஏற்படுத்தியது. வீடுகளில் இருந்து வெளியேற ஜன்னல்கள் மற்றம் பால்கனிகளில் இருந்து பலர் குதித்துள்ளனர். இதில், பலர் காயமடைந்தனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் ஒரு சிறுமி உயிரிழந்தார்" என தெரிவித்துள்ளனர்.

துருக்கிய உள்துறை அமைச்சர் அலி யெர்லிகாயா, "மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் 14 வயது சிறுமி உயிரிழந்தார். பதற்றம் காரணமாக அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். வேறு ஏதேனும் காரணம் இருந்ததா என்பது தெரியவில்லை. அச்சம் காரணமாக ஜன்னல்கள் மற்றும் பால்கனிகளில் இருந்து குதித்ததில் சுமார் 70 பேர் காயம் அடைந்து அதற்காக சிகிச்சை பெற்றனர். கட்டிடங்களுக்கு சேதம் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை" என்று தெரிவித்தார்.

துருக்கியில் இதற்கு முன் கடந்த 2023-ஆம் ஆண்டில், 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில், 53,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தெற்கு மற்றும் தென்கிழக்கு மாகாணங்களில் லட்சக்கணக்கான கட்டிடங்கள் இடிந்தன. அண்டை நாடான சிரியாவின் வடக்குப் பகுதியில் சுமார் 6,000 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x