Published : 02 Jun 2025 04:56 PM
Last Updated : 02 Jun 2025 04:56 PM
நியூயார்க்: காசா போரை கண்டித்து உரையாற்றியதால், அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தில் (எம்ஐடி - MIT) படிக்கும் இந்திய வம்சாவளி மாணவி மேகா வெமுரி பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.
எம்ஐடி-யின் 2025-ம் ஆண்டு வகுப்புத் தலைவரான மேகா வெமுரி வியாழக்கிழமை (மே 29) மாசசூசெட்ஸின் கேம்பிரிட்ஜில் நடைபெற்ற ‘ஒன்-எம்ஐடி’ (OneMIT) தொடக்க விழாவில் கலந்து கொண்டு பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் இஸ்ரேலை கண்டித்தும் உரையாற்றினார். மேலும், காசா போரை எதிர்த்துப் போராடியதற்காக தனது சகாக்களைப் பாராட்டிய அவர், இஸ்ரேலுடனான பல்கலைக்கழகத்தின் உறவுகளை விமர்சித்தார். இதையடுத்து, மேகா வெமுரி மீது பல்கலைக்கழகம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, வெள்ளிக்கிழமை (மே 30) நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள அவர் அனுமதிக்கப்படவில்லை. மேலும், பட்டமளிப்பு விழா முடியும் வரை பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டது.
“எம்ஐடி கருத்து சுதந்திரத்தை ஆதரிக்கிறது. அதேநேரத்தில், மேகா வெமுரி மீதான நடவடிக்கையில் பல்கலைக்கழகம் உறுதியாக உள்ளது. ஏனெனில், அந்த நபர் வேண்டுமென்றே நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை தவறாக வழிநடத்தி மேடையில் இருந்து போராட்டத்தை வழிநடத்தி இருக்கிறார்” என்று பல்கலைக்கழக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். எனினும், மேகா வெமுரி தனது பட்டத்தைப் பெறுவார் என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மேகா வெமுரி, "இனப்படுகொலைக்கு உடந்தையாக இருக்கும் ஒரு நிறுவனத்தின் மேடையைக் கடந்து செல்ல வேண்டிய அவசியமில்லை என்று நான் கருதுகிறேன். எனினும், எம்ஐடி அதிகாரிகள் உரிய நடைமுறை இல்லாமல் என்னைத் தண்டிக்க முயன்றதால் பெருமளவில் நான் ஏமாற்றமடைந்துள்ளேன். நான் உரையாற்றியதால் பல்கலைக்கழகத்தின் எந்தவொரு விதியும் மீறப்படவில்லை" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர், பேச்சு சுதந்திரத்திற்கு எம்ஐடி ஆதரவு அளிப்பதாகக் கூறுவது பாசாங்குத்தனம் என்றும் அவர் விமர்சித்தார்.
பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள மேகா வெமூரி தடை விதிக்கப்பட்டதற்கு அமெரிக்க - இஸ்லாமிய உறவுகள் கவுன்சில் (CAIR) கண்டனம் தெரிவித்துள்ளது. "எம்ஐடி கல்வி சுதந்திரத்தை மதிக்க வேண்டும், அதன் மாணவர்களின் குரல்களை மதிக்க வேண்டும், இனப்படுகொலைக்கு எதிராகவும் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும் பேசுபவர்களைத் தண்டிக்கவோ மிரட்டவோ கூடாது," என்று சிஏஐஆர் - மாசசூசெட்ஸ் நிர்வாக இயக்குனர் தஹிரா அமதுல்-வதூத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT