Last Updated : 02 Jun, 2025 11:29 AM

 

Published : 02 Jun 2025 11:29 AM
Last Updated : 02 Jun 2025 11:29 AM

அமெரிக்காவின் கொலராடோவில் இஸ்ரேல் ஆதரவு பேரணியில் பதற்றம்: மக்கள் மீது தீ வைத்து எரிக்க முயற்சி

நியூயார்க்: அமெரிக்காவின் கொலராடோவில், காசாவில் ஹமாஸ் பிடித்துவைத்துள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளை நினைவுகூர கூடியிருந்த மக்கள் குழு மீது ஒரு நபர் திரவத்தை வீசி, அவர்கள் மீது தீயை பற்றவைத்துள்ளார். இதில் ஆறு பேர் காயமடைந்தனர். இதுகுறித்து முகமது சப்ரி சோலிமான் எனும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொலராடோவின் போல்டரில் காசாவில் உள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளை நினைவுகூர நடத்தப்பட்ட பேரணியின் போது, ஒரு நபர் மக்கள் மீது திரவத்தை வீசி தீவைத்துள்ளார். இந்த சம்பவத்தின்போது அவர் "பாலஸ்தீனத்தை விடுவிப்போம்" என்று கத்திக்கொண்டே சென்றார்.

இச்சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததை அடுத்து, உள்ளூர் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர் என்று போல்டர் காவல்துறைத் தலைவர் ஸ்டீபன் ரெட்ஃபியர்ன் கூறினார். இதில் பாதிக்கப்பட்ட 67 முதல் 88 வயதுக்குட்பட்ட ஆறு பேரும் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் வைரலான இந்த சம்பவத்தின் வீடியோவில், சன்கிளாஸ்கள் அணிந்திருந்த முகமது சப்ரி சோலிமான் சட்டை போடாமல் வெறும் உடலுடன், ஒரு கையில் தீப்பற்ற வைக்கும் கருவியையும், மறு கையில் தீப்பற்றக்கூடிய திரவமான மோலோடோவ் காக்டெய்லையும் பிடித்துக்கொண்டு, போராட்டக்காரர்களை நோக்கி கத்திக் கொண்டிருப்பதைக் காணலாம். மேலும், இந்த வீடியோவில், உள்ளூர்வாசிகள் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற முயல்வதையும், பாதிப்புக்குள்ளானவர்கள் தரையில் படுத்துக் கொண்டு, வலியால் துடிப்பதையும் காணலாம்.

இதுகுறித்து பேசிய எப்பிஐ தலைவர் காஷ் படேல் இந்தத் தாக்குதலை திட்டமிடப்பட்ட பயங்கரவாதச் செயல் என்று கூறினார். கொலராடோ அட்டர்னி ஜெனரல் பில் வீசர், இது “குறிப்பிட்ட ஒரு குழுவை இலக்காகக் கொண்ட ஒரு வெறுப்புக் குற்றம்” என்று கூறினார். தாக்குதல் நடத்திய முகமது சப்ரி சோலிமானை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே தொடர்ந்து வரும் போரால் அமெரிக்காவில் பதற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் அமெரிக்காவில் இஸ்ரேல் ஆதரவாளர்களுக்கும் பாலஸ்தீன ஆதரவு குழுக்களுக்கும் இடையே யூத எதிர்ப்பு வெறுப்பு குற்றங்கள் மற்றும் சூடான விவாதங்கள் அதிகரித்து வருகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x