Published : 30 May 2025 12:18 AM
Last Updated : 30 May 2025 12:18 AM

உலக நாடுகள் மீதான வரிவிதிப்பு: ட்ரம்பின் நடவடிக்கைக்கு அமெரிக்க வர்த்தக நீதிமன்றம் தடை - பின்னணி என்ன?

உலக நாடுகள் இடையேயான வர்த்தகத்துக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடுமையான வரி உயர்வை அறிவித்தார். அவரின் இந்த தன்னிச்சையான நடவடிக்கைக்கு அமெரிக்க சர்வதேச வர்த்தக நீதிமன்றம் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது. இது, ட்ரம்ப் நிர்வாகத்துக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்தியா, சீனா, ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட நாடுகளுக்கு கடுமையான வரி விதிப்பை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்தார். குறிப்பாக, வர்த்தக மோதலில் ஈடுபட்ட சீனாவுக்கு 145 சதவீதம் வரை வரி விதிப்பு உயர்த்தப்பட்டது. இதனிடையே, வர்த்தகம் தொடர்பாக பரஸ்பரம் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஏதுவாக சீனாவை தவிர, மற்ற நாடுகளுக்கான வரி விதிப்பை 3 மாத காலத்துக்கு நிறுத்தி வைப்பதாக ட்ரம்ப் அறிவித்தார்.

ட்ரம்ப் நிர்வாகத்தின் வரிவிதிப்பு கொள்கைக்கு எதிராக அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் வழக்குகள் தொடரப்பட்டன. அதில், ட்ரம்பின் வரி விதிப்பு கொள்கை சட்டவிரோதமானது. இது, அமெரிக்க பொருளாதாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச அவரச பொருளாதார அதிகாரச் சட்டத்தின் (ஐஇஇபிஏ) கீழ் ட்ரம்ப் தன்னிச்சையாக வரிகளை விதிக்கமுடியும் என்பது தவறானது. வரிகளை விதிக்க நாடாளுமன்றத்துக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. அவசர நிலை, வெளியில் இருந்து அசாதாரண அச்சுறுத்தல் இருக்கும்போது மட்டுமே அதிபர் ஐஇஇபிஏ சட்டத்தை செயல்படுத்த முடியும். எனவே, இந்த வரிவிதிப்பை சட்டவிரோதமானது என்று அறிவித்து, அவற்றை செயல்படுத்துவதற்கு அதிகாரிகளுக்கு தடைவிதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.

இந்த நிலையில், மன்ஹாட்டன் சர்வதேச வர்த்தக நீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு ட்ரம்ப் வரிவிதிப்புக்கு எதிரான மனு விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில், “ இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தத்தை ஏற்படுத்த ட்ரம்ப் தனது வரி அதிகாரத்தை பயன்படுத்தினார். வரி விதிப்பை தடுத்தால் சீனாவுடன் சமச்சீரற்ற வர்த்தகம் ஏற்படும். அணு ஆயுதங்களை வைத்துள்ள இந்தியா-பாகிஸ்தான் இடையே கடுமையான மோதல் மீண்டும் உருவாகக்கூடும்" என்று வாதிடப்பட்டது.

அரசு தரப்பின் அனைத்து வாதங்களையும் நிராகரித்த சர்வதேச வர்த்தக நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு ட்ரம்பின் வரிவிதிப்பு நடவடிக்கைக்கு தடைவிதித்து உத்தரவிட்டது.

மேலும் நீதிபதிகள் தங்களது உத்தரவில், “ அமெரிக்க அதிபருக்கு வரம்பற்ற அதிகாரங்கள் வழங்கப்படவில்லை. அசாதாரண, அச்சுறுத்தல் காலத்தின்போது தேவையான பொருளாதார தடைகளை விதிக்க மட்டுமே அவருக்கு அதிகாரம் உள்ளது. இந்த விவகாரத்தில் ட்ரம்ப் தனக்குள்ள அதிகாரத்தை மீறி செயல்பட்டுள்ளார்" என்று தெரிவித்தனர். இந்த தீர்ப்பு வெளியான உடன் ட்ரம்ப் நிர்வாகம் உடனடியாக மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x