Published : 29 May 2025 10:30 PM
Last Updated : 29 May 2025 10:30 PM
பாகு: மே 9, 10-ம் தேதி வாக்கில் பிரம்மோஸ் ஏவுகணையை கொண்டு இந்திய ராணுவம், பாகிஸ்தானின் முக்கிய ராணுவம் தளங்களை தாக்கியது என பாகிஸ்தான் நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். அஜர்பைஜான் நாட்டின் தலைநகரில் அவர் இதனை கூறியிருந்தார்.
“இந்தியாவுக்கு தகுந்த பதிலடி கொடுக்க நாங்கள் திட்டமிட்டு இருந்தோம். மே 9, 10-ம் தேதி அதிகாலை தொழுகைக்கு பிறகு 4.30 மணி அளவில் தாக்குதல் நடத்தலாம் என எங்கள் ராணுவம் முடிவு செய்திருந்தது. ஆனால், அதற்குள் பிரம்மோஸ் ஏவுகணையை கொண்டு இந்தியா தாக்குதல் நடத்தியது.
பாகிஸ்தானின் பல்வேறு மாகாணங்கள் குறிவைக்கப்பட்டன. அதில் ராவல்பிண்டி விமான நிலையமும் அடங்கும்” என ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்தார். அஜர்பைஜானில் பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனீர் முன்னிலையில் இதை அவர் தெரிவித்திருந்தார்.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், நான்கு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த நாடுகள் இந்தியா - பாகிஸ்தான் மோதலில் பாகிஸ்தானுக்கு ஆதரவு வழங்கி இருந்தன.
முன்னதாக, காஷ்மீர் பிரச்சினை, தண்ணீர் பிரச்சினை என இந்தியா உடனான அனைத்து பிரச்சினைகளையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க நாங்கள் விரும்புகிறோம். மேலும், வர்த்தகம் மற்றும் தீவிரவாத ஒழிப்பு குறித்து எங்கள் அண்டை நாடுகளுடன் பேசவும் தயாராக இருக்கிறோம்.
ஆனால், பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த இந்தியா முயன்றால், நமது நாட்டைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்போம். அமைதியான முறையில் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தால், நாமும் உண்மையிலேயே அமைதியை விரும்புகிறோம் என்பதை நாங்கள் காட்டுவோம்.
பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான அமைதி எங்கள் இரு நாடுகளுக்கும் பயனளிப்பது மட்டுமல்லாமல், பிராந்திய அமைதி மற்றும் செழிப்புக்கும் பங்களிக்கும் என அவர் தெரிவித்திருந்தார்.
ஆபரேஷன் சிந்தூர்: பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த 7-ம் தேதி பாகிஸ்தானில் செயல்பட்ட 9 தீவிரவாத முகாம்களை இந்திய விமானப் படை அழித்தது. இதைத் தொடர்ந்து கடந்த 7-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை இந்தியா, பாகிஸ்தான் இடையே அதிதீவிர போர் நடைபெற்றது.
ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியாவின் முப்படைகளும் தாக்குதல் நடத்தின. இந்திய ராணுவத்தின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் சர்வதேச நாடுகளின் உதவியை பாகிஸ்தான் நாடியது. இறுதியில் பாகிஸ்தான் மூத்த தளபதி நேரடியாக இந்திய ராணுவ மூத்த தளபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பாகிஸ்தானின் வேண்டுகோளை ஏற்று கடந்த 10-ம் தேதி இரு நாடுகளிடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT