Published : 20 May 2025 09:14 AM
Last Updated : 20 May 2025 09:14 AM
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடனான இரண்டு மணி நேர தொலைபேசி உரையாடலுக்குப் பிறகு, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக தளத்தில் ’‘ரஷ்யாவும் உக்ரைனும் உடனடியாக போர்நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தையை தொடங்க இருக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து ட்ரம்ப் வெளியிட்ட பதிவில், “ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் எனது இரண்டு மணி நேர உரையாடலை நிறைவு செய்தேன். அது மிகவும் சிறப்பாக நடந்தது என நான் நம்புகிறேன். ரஷ்யாவும் உக்ரைனும் உடனடியாக போர் நிறுத்தம் தொடர்பாக, இன்னும் முக்கியமாக, போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளைத் தொடங்க உள்ளனர். அதற்கான நிபந்தனைகள் குறித்து இரு தரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்படும்.
இந்த ரத்தக்களரியான பேரழிவு முடிந்ததும், அமெரிக்காவுடன் பெரிய அளவிலான வர்த்தகம் செய்ய ரஷ்யா விரும்புகிறது. அதை நான் ஒப்புக்கொள்கிறேன். ரஷ்யாவுக்கு மிகப் பெரிய அளவிலான வேலைவாய்ப்பு மற்றும் வளத்தை உருவாக்க மிகப் பெரிய வாய்ப்பு உள்ளது. அதன் ஆற்றல் அளவில்லாதது. அதேபோல், உக்ரைனும் தனது நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் செயல்பாட்டில், வர்த்தகத்தில் பெரும் பயனாளியாக இருக்க முடியும். ரஷ்யாவுக்கு உக்ரைனுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் உடனடியாகத் தொடங்கும்.
புதினுடனான அழைப்புக்குப் பிறகு, உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, ஜெர்மனி அதிபர் பிரீட்ரிக் மெர்ஸ், பின்லாந்து அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப் ஆகியோருக்கு நான் தகவல் தெரிவித்துள்ளேன். போப் பிரதிநிதித்துவப்படுத்தும் வாடிகன், இந்த பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதில் மிகவும் ஆர்வமாக இருப்பதாகக் கூறியுள்ளது. செயல்முறை தொடங்கட்டும்” என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT