Published : 06 May 2025 06:09 AM
Last Updated : 06 May 2025 06:09 AM
புதுடெல்லி: இந்தியாவுக்கு எதிராக செயல்படும் பாகிஸ்தான் ராணுவத்துக்கு ஆதரவு அளிக்க பொதுமக்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் அங்கு உள்நாட்டு கலகம் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவுகிறது. இந்நிலையில், பாகிஸ்தானில் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில், இந்தியாவுடனான போர் பதற்றம் குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படுகிறது.
அப்போது இந்த விவகாரத்தில் ராணுவத்தின் செயல்பாட்டுக்கு ஆதரவு அளிக்க அவர்கள் மறுத்துவிட்டனர். இது அந்நாட்டு ராணுவ தளபதி அசிம் முனிருக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இஸ்லாமாபாத்தில் உள்ள லால் மசூதியில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு பிரசங்கத்தின்போது, பிரபல தியோபண்டி மதகுரு மவுலானா அப்துல் அஜீஸ் காசி, “இந்தியாவுடன் போர் தொடுக்க வேண்டுமா என்பதற்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் கையை உயர்த்த வேண்டும்” என கேட்டுக் கொண்டார். ஆனால் ஒருவர் கூட கையை உயர்த்தவில்லை.
மவுலானா கண்டனம்: இதையடுத்து, பாகிஸ்தான் ராணுவம் மற்றும் ஆட்சியாளர்களுக்கு மவுலானா கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும், “இந்தியாவைவிட பாகிஸ்தான் அடக்குமுறையைக் கையாள்கிறது. குறைந்தபட்சம் இந்தியா ஒருபோதும் லால் மசூதி அல்லது வஜிரிஸ்தான் மீது குண்டு வீசவில்லை” என்றார். கடந்த 2007-ம் ஆண்டு லால் மசூதியை முற்றுகையிட்டது மற்றும் வஜிரிஸ்தான் மீது பல முறை நடந்த விமானத் தாக்குதல் உள்ளிட்ட பாகிஸ்தான் ராணுவத்தின் உள்நாட்டு அடக்குமுறையை அவர் மறைமுகமாக குறிப்பிட்டார்.
மேலும் தற்போதைய ஆட்சியில், பலூச் மற்றும் பஷ்துன் பிரிவு மக்கள், இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியினர் (பிடிஐ), மத குருமார்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் காணாமல் போன விவகாரத்தையும் அவர் நினைவுகூர்ந்தார். “பஷ்துன் பிரிவு மக்கள் மீது ராணுவம் அடக்குமுறையைக் கையாண்டுள்ளது. இந்நிலையில், இந்தியா பாகிஸ்தானை தாக்கினால் பஷ்துன்களாகிய நாங்கள் இந்திய ராணுவத்தின் பக்கம் நிற்போம்” என்றும் மவுலானா கூறியுள்ளார்.
இந்த கருத்துகள் சர்ச்சைக்குரியவை என்றாலும், உள்நாட்டில் நிலவும் அதிருப்தியை பிரதிபலிக்கின்றன. குறிப்பாக, பலூச் மற்றும் பஷ்துன் பிரிவினரும் பிடிஐ கட்சியினரும் ராணுவத்துக்கு சவால் விடுத்துள்ளனர். இதனால் பாகிஸ்தானில் உள்நாட்டு கலகம் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சிறுவர்கள் வெறுப்பு: இங்கிலாத்தில் பாகிஸ்தானிய தந்தை மற்றும் இந்திய தாய்க்கு பிறந்தவர் அட்னான் சாமி. பிரபல பாடகரும் இசை அமைப்பாளருமான இவர், 2016-ல் இந்தியக் குடியுரிமை பெற்றார். இவர் தனது ‘எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: அஜர்பைஜான் நாட்டின் பாகு நகர அழகிய வீதிகளில் நடக்கும்போது பாகிஸ்தான் சிறுவர்கள் சிலரை சந்தித்தேன். அப்போது அவர்கள் என்னிடம், “நீங்கள் அதிர்ஷ்டசாலி. சரியான நேரத்தில் நீங்கள் பாகிஸ்தானை விட்டு வெளியேறி விட்டீர்கள்.
நாங்களும் பாகிஸ்தானை விட்டு வெளியேற விரும்பினோம். நமது ராணுவத்தை நாங்கள் வெறுக்கிறோம். நமது நாட்டை அவர்கள் அழித்துவிட்டனர்" என்று கூறினர். இதற்கு நான், “இதனை நான் பல ஆண்டுகளுக்கு முன்பே உணர்ந்துவிட்டேன்" என்று கூறினேன். இவ்வாறு அட்னான் சாமி கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT