Published : 05 May 2025 11:02 AM
Last Updated : 05 May 2025 11:02 AM
நியூயார்க் சிட்டி: பஹல்காம் தீவிரவாத தாக்குதலை அடுத்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், இன்று ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் கூடுகிறது. இதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் தரப்பில் முக்கிய விவகாரங்கள் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பஹல்காம் தீவிரவாத தாக்குதலை அடுத்து இரு நாடுகளும் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன. இதில் சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக இந்தியா அறிவித்துள்ளது. இது சட்டவிரோத நடவடிக்கை என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை ஞாயிற்றுக்கிழமை அன்று கூறியது. இந்த நடவடிக்கை காரணமாக தங்கள் பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எழுந்துள்ளதாக தெரிவித்தது.
மேலும், இந்தியாவின் நடவடிக்கை குறித்து உலக அமைப்பை அணுக உள்ளதாக பாகிஸ்தான் அறிவித்தது. இந்த சூழலில் தான் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் இன்று கூடுகிறது.
முன்னதாக, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான பதற்றமான சூழல் குறித்து கவலை தெரிவித்திருந்தது ஐ.நா. “உலகில் தீவிரவாதத்தின் அனைத்து வடிவங்களையும் நாங்கள் கண்டிக்கிறோம். இது கொள்கை ரீதியான விஷயம். தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். தெற்கு ஆசிய பகுதியில் அமைந்துள்ள இரண்டு பெரிய நாடுகளான இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பதற்றம் குறித்து நாங்கள் கவலை அடைந்துள்ளோம். பாகிஸ்தானை விட இந்தியா பெரியது” என்று ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் மே மாதத்துக்கான தலைவர் எவாஞ்சலோஸ் செகெரிஸ் கூறியிருந்தார்.
கடந்த 22-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. பாகிஸ்தானில் உள்ள இந்தியர்கள் மற்றும் இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்களின் விசா ரத்து செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தாயகம் திரும்பி உள்ளனர். இந்த சூழலில் இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT