Published : 04 May 2025 06:04 AM
Last Updated : 04 May 2025 06:04 AM
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், போப் உடையில் இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் பிரான்சிஸ் (88) கடந்த ஏப்ரல் 21-ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அவரது உடலுக்கு லட்சக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து அவரது உடல் அவரது விருப்பப்படி ரோமில் உள்ள புனித மேரி தேவாலயத்தில் ஏப்ரல் 26-ம் தேதி நல்லடக்கம் செய்யப்பட்டது. புதிய போப்பை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு நடைமுறை இந்த வாரம் தொடங்க உள்ளது.
இந்நிலையில் அதிபர் ட்ரம்ப் போப் உடையில் இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட இப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்படத்தை 'எக்ஸ்' தளத்தில் வெள்ளை மாளிகையும் பகிர்ந்து கொண்டுள்ளது.
இந்த வேளையில் டரம்ப் வெளியிட்ட புகைப்படம் பேசுபொருளாகியுள்ளது. சமூக ஊடகத்தில் சிலர் இந்தப் படத்தை வேடிக்கையாக பார்த்தாலும் பலர் ஏமாற்றம் தெரிவித்துள்ளனர்.
இப்பதிவு அவமரியாதைக்குரியது, போப் பிரான்சிஸ் மரணத்தை ட்ரம்ப் கேலி செய்கிறார் என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
முன்னதாக அதிபராக பதவியேற்று 100 நாள் நிறைவு கொண்டாட்டத்தில் செய்தியாளர்களிடம் ட்ரம்ப் பேசுகையில், “நான் போப் ஆக விரும்புகிறேன், அதுவே எனது முதல் தேர்வாக இருக்கும்" என்று நகைச்சுவையுடன் குறிப்பிட்டார்
இதற்கு எதிர்வினையாற்றிய தெற்கு கரோலினா எம்.பி. லிண்ட்சே கிரகம், “அடுத்த போப் ஆக ட்ரம்ப் விருப்பம் தெரிவித்திருப்பது மகிழ்ச்சி. அடுத்த போப்பை தேர்வு செய்யும்போது கார்டினல்கள் இதை கவனத்தில் கொள்ள வேண்டும்" என்று கூறியிருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT