Last Updated : 02 May, 2025 09:32 AM

 

Published : 02 May 2025 09:32 AM
Last Updated : 02 May 2025 09:32 AM

சொந்த மக்களுக்கே கதவடைத்து தவிக்கவிடும் பாகிஸ்தான்: அட்டாரி - வாகா எல்லையில் நடப்பது என்ன?

கோப்புப்படம்

அமிர்தசரஸ்: இந்தியாவையும், பாகிஸ்தானையும் சாலை மார்க்கமாக இணைக்கும் அட்டாரி - வாகா எல்லையை பாகிஸ்தான் மூடியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், இந்தியாவில் இருந்து தங்கள் சொந்த நாட்டுக்கே செல்ல முடியாமல் பாகிஸ்தானியர்கள் தவித்து வருகின்றனர்.

இந்தியாவில் இருந்து தாய்நாடு திரும்பி வரும் பாகிஸ்தான் மக்கள் எல்லையில் செய்வதறியாது எல்லை சோதனைச் சாவடி பகுதியில் கதறி வருகின்றனர். இது தொடர்பாக முறையான விளக்கம் எதுவும் பாகிஸ்தான் தரப்பில் இதுவரை அளிக்கப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது. இந்தியாவில் இருந்து பாகிஸ்தானியர்கள் வெளியேற இந்திய அரசு அவகாசம் அளித்து, அந்த மக்களுக்கு சற்றே நிம்மதியை ஏற்படுத்த நிலையில், பாகிஸ்தானின் எல்லை சோதனைச் சாவடி கதவு மூடல் என்பது பாகிஸ்தானியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

கடந்த மாதம் 22-ம் தேதி இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் கடந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்பட்ட 14 வகையான விசாக்களை மத்திய அரசு ரத்து செய்தது. பாகிஸ்தானும் இதே நடவடிக்கையை கையில் எடுத்தது. இதனால் பாகிஸ்தானில் உள்ள இந்தியர்களும், இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்களும் தங்கள் தாய்நாட்டுக்கு திரும்பி வருகின்றனர். பஞ்சாப் மாநிலம் அமிர்தரஸில் உள்ள வாகா - அட்டாரி சோதனைச் சாவடி வழியாக வெளியேறி வருகின்றனர்.

இதுவரை 1,617 இந்தியர்கள் பாகிஸ்தான் இருந்தும், 224 பாகிஸ்தானியர்கள் இந்தியாவில் இருந்தும் தங்கள் தாயகத்துக்கு திரும்பி உள்ளனர். சார்க் விசா, மருத்துவ சிகிச்சைக்கான விசா, சுற்றுலா விசா மற்றும் பிற விசாக்கள் என அனைத்தையும் இரு நாடுகளும் ரத்து செய்துள்ளன. இதன் காரணமாக இந்தியர்களை திருமணம் செய்த பாகிஸ்தானை சேர்ந்தவர்கள், தங்கள் குடும்பத்தை விட்டு பிரிய வேண்டிய நிர்ப்பந்தமும் எழுந்துள்ளது.

கடந்த புதன்கிழமை (ஏப். 30) அன்று மட்டும் 15 இந்தியர்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட பாகிஸ்தானியர்களும் நாடு திரும்பினர். இந்நிலையில், வியாழக்கிழமை அன்று எல்லை கதவுகளை முற்றிலுமாக பாகிஸ்தான் அடைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் அந்த நாட்டு மக்களே தாயகம் திரும்ப முடியாமல் அட்டாரி - வாகா எல்லையில் தவித்து வருகின்றனர்.

“என் அம்மாவை ஹரித்வார் அழைத்து வந்தேன். 45 நாட்கள் இந்தியாவில் இருக்க எங்களுக்கு விசா கிடைத்தது. 10 நாட்களுக்கு முன்பு இந்தியாவுக்கு வந்தோம். இருப்பினும் நாங்கள் முன்கூட்டியே வெளியேற வேண்டும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதனால் அட்டாரி வந்தோம். ஆனால், எல்லை கதவுகள் மூடப்பட்டுள்ளது” என பாகிஸ்தானை சேர்ந்த சூரஜ்குமார் என்பவர் தனியார் ஊடக நிறுவனத்திடம் தெரிவித்தார்.

“எங்களை பாகிஸ்தானுக்கு மீண்டும் அழைத்துக் கொள்ள வேண்டும் என பாகிஸ்தான் அதிகாரிகளிடம் முறையிட்டோம். எல்லை பகுதியில் நீண்ட நேரம் காத்துக் கொண்டுள்ளேன்” என பாகிஸ்தானை சேர்ந்த ஹர்ஷ் குமார் கூறியுள்ளார். பாகிஸ்தான் திரும்ப எல்லை பகுதியில் காத்திருப்பவர்களில் இந்தியாவை சேர்ந்த நம்ரா என்ற பெண்ணும் உள்ளார். லாகூரை சேர்ந்தவரை அவர் திருமணம் செய்து கொண்டுள்ளார். குடும்பத்துடன் வாழ விரும்பும் அவர், பாகிஸ்தான் அதிகாரிகளின் உத்தரவுக்காக காத்துக் கொண்டுள்ளார்.

பாகிஸ்தானியர்கள் வெளியேற அவகாசம் நீட்டிப்பு: முன்னதாக, இந்தியாவில் இருந்து பாகிஸ்தானியர்கள் வெளியேறுவதற்கான கால அவகாசத்தை மறு தேதி குறிப்பிடாமல் மத்திய அரசு நேற்று நீட்டித்தது. இதுகுறித்து உள்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ள உத்தரவில், “அட்டாரியில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி வழியாக பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்தை உடனடியாக நிறுத்த கடந்த ஏப்ரல் 24-ம் தேதி உத்தரவிடப்பட்டது.

உரிய அனுமதி பெற்று இந்தியா வந்தவர்கள், இவ்வழியே மே 1-ம் தேதிக்கு முன் பாகிஸ்தான் திரும்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவு மறு ஆய்வு செய்யப்பட்டு பகுதி அளவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை பாகிஸ்தான் குடிமக்கள் அட்டாரி சோதனை சாவடி வழியாக இந்தியாவை விட்டு வெளியேற அனுமதி அளிக்கப்படுகிறது" என்று கூறப்பட்டுள்ளது.

பஹல்காம் தாக்குதல் காரணமாக மத்திய அரசு கடந்த 24-ம் தேதி பிறப்பித்த உத்தரவை தொடர்ந்து 6 நாட்களில் 55 தூதரக ஊழியர்கள் உட்பட 786 பாகிஸ்தானியர்கள் அட்டாரி - வாகா எல்லை வழியாக நாடு திரும்பியுள்ளனர். இதேபோல் பாகிஸ்தானில் இருந்து 1,465 இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளனர். இந்நிலையில் மத்திய அரசின் இந்த உத்தரவு எல்லையில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானியர்களுக்கு பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய வான்பரப்பில் பாக். விமானங்கள் பறக்க தடை: இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நேரடி விமான சேவை இல்லை. எனினும் பாகிஸ்தானின் விமான சேவை நிறுவனங்கள், இந்திய வான் பரப்பு வழியாக சிங்கப்பூர், மலேசியா, கிழக்கு ஆசிய நாடுகளுக்கு விமானங்களை இயக்கி வந்தன.

தற்போது இந்திய வான் பரப்பில் பாகிஸ்தான் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த தடை உத்தரவு வியாழக்கிழமை முதல் அமலுக்கு வந்திருக்கிறது. மே 23-ம் தேதி வரை தடை நீடிக்கும். அதன்பிறகு அப்போதைய சூழலுக்கு ஏற்ப முடிவு எடுக்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தியா - பாக். பதற்றம் நீடிப்பு: கடந்த 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதன் காரணமாக இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் எழுந்திருக்கிறது. பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவாதர் துறைமுகம், அதே மாகாணத்தில் உள்ள பஸ்னி விமானப்படை தளம், கில்ஜித் பகுதியில் உள்ள ஸ்கர்டு விமானப்படை தளம், கைபர் பதுன்கவாவில் உள்ள ஸ்வாட் விமானப் படைத் தளம் ஆகியவற்றின் மீது இந்தியா தாக்குதல் நடத்தக்கூடும் என்று பாகிஸ்தான் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அந்த பகுதிகளில் பயணிகள் விமானங்கள் பறக்க பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது.

இந்தியாவுடன் நேரடி மோதலை தவிர்க்க அமெரிக்காவின் உதவியை பாகிஸ்தான் அரசு நாடியிருப்பதாக கூறப்படுகிறது. இந்தச் சூழலில் அமெரிக்க வெளியுறவுதுறை அமைச்சர் மார்கோ ரூபியோ மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் நேற்று முன்தினம் தொலைபேசியில் பேசினார்.

தீவிரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் போருக்கு அமெரிக்கா துணை நிற்கும் என்று அவர் உறுதி அளித்தார். தாக்குதலுக்கு காரணமான தீவிரவாதிகளை நீதியின் முன்பு நிறுத்த வேண்டும். அதேநேரம் இந்தியாவும், பாகிஸ்தானும் பதற்றத்தை தணிக்க வேண்டும்' என்று அவர் வலியுறுத்தினார். அதேபோல், பஹல்காம் தீவிரவாத தாக்குதல் தொடர்பாக இந்தியாவுடன் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீபுக்கு அமெரிக்கா அறிவுரை வழங்கி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x