Published : 27 Apr 2025 12:49 PM
Last Updated : 27 Apr 2025 12:49 PM
ஒட்டோவா: கனடாவின் வான்கூவரில் நேற்றிரவு நடந்த விழா ஒன்றில் கூட்டத்தில் கார் மோதியதில் பலர் உயிரிழந்துள்ளர், மேலும் பலர் காயமடைந்துள்ளனர் என்று போலீஸார் தெரிவித்தனர்.
இதுகுறித்து வான்கூவர் போலீஸார் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், " இன்று (சனிக்கிழமை) இரவு 8 மணிக்கு E.41-வது அவென்யூவில் நடந்த விழா ஒன்றில் கூட்டத்தினர் மீது கார் மோதியதில் சிலர் உயிரிழந்துள்ளனர், பலர் காயமடைந்துள்ளனர். கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணையின் முடிவில் சம்பவம் குறித்த கூடுதல் தகவல்கள் தெரிவிப்போம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை போலீஸார் இன்னும் உறுதிப்படுத்தவில்லை, இருந்தபோதிலும் சமூக ஊடகங்களில் பரவி வரும் வீடியோக்களில் தெரு முழுவதும் இறந்தவர்களின் உடல்கள் கிடப்பதை பார்க்க முடிகிறது. கூட்டத்தினர் மீது மோதியதாக கூறப்படும் கருப்பு எஸ்யூவி கார் ஒன்று நொறுங்கிய நிலையில், சம்பவம் நடந்த இடத்துக்கு அருகில் நீலநிற லாரிக்கு அருகில் நிற்பதைக் காண முடிகிறது.
வேறு சில வீடியோக்களில் காயமடைந்தவர்களுக்கு பிறர் உதவி செய்வதையும் பலர் கதறுவதையும் காணமுடிகிறது. பிலிப்பினோ பாரம்பரியம் மற்றும் கலாச்சார விழாவைக் கொண்டாடும் லாபு லாபு தின விழாவில் நடந்த இந்த துயரச் சம்பவம் குறித்து வான்கூவர் மேயர் கென் சிம் தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
அவர் கூறுகையில், "கூடிய விரைவில் நாங்கள் மேலதிக தகவல்களை தெரிவிக்க முயற்சி செய்கிறோம். ஆனால் இந்த நேரத்தில், சில உயிரிழப்புகளும், பலர் காயமடைந்துள்ளதையும் வான்கூர் போலீஸார் உறுதி செய்துள்ளனர். இந்தத் துயரமான நேரத்தில் வான்கூவரின் பிலிப்பினோ சமூகத்தினருடன் எங்களின் எண்ணங்கள் துணை நிற்கின்றன" என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT