Published : 27 Apr 2025 10:39 AM
Last Updated : 27 Apr 2025 10:39 AM
தெஹ்ரான்: ஈரான் நாட்டில் அமைந்துள்ள பந்தர் அப்பாஸ் பகுதியில் உள்ள ஷாஹித் ராஜாயி துறைமுகத்தில் சனிக்கிழமை (ஏப்.26) ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. இதில் 750-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த தகவலை ஈரான் நாட்டின் அரசு செய்தி நிறுவனமான ஐஆர்என்ஏ உறுதி செய்துள்ளது.
ஈரான் தலைநகரில் தெஹ்ரானில் இருந்து சுமார் 1,000 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த துறைமுகத்தில் வெடிவிபத்து ஏற்பட்டதும் வான்வழியாக ஹெலிகாப்டர் மூலம் தீயை அணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. ஹார்முஸ் ஜலசந்தி அருகே இந்த விபத்து ஏற்பட்டது. உலக அளவிலான எண்ணெய் விநியோக பணியில் இந்த பகுதி முக்கியமானதாக உள்ளது.
துறைமுகத்தில் இருந்த ரசாயனங்களை மிகவும் மோசமான முறையில் பராமரிப்பின்றி அலட்சியமாக கிடங்குகளில் வைத்திருந்ததுதான் காரணம் என்கிறார் ஈரானின் நெருக்கடி மேலாண்மை அமைப்பின் செய்தித் தொடர்பாளராக ஹுசைன் சபாரி. “கன்டெய்னர்களுக்குள் வைக்கப்பட்டிருந்த ரசாயனங்கள் தான் இந்த வெடிவிபத்துக்கு காரணமாக அமைந்துள்ளது. இதற்கு முன்பு பாதுகாப்பு அமைப்பு சார்ந்தவர்கள் ஆய்வு நடத்திய போது, இந்த துறைமுகத்தில் இருக்கும் அபாயங்கள் சுட்டிக்காட்டப்பட்டன” என அவர் கூறியுள்ளார்.
இருப்பினும் ஈரான் அரசு தரப்பில் இந்த வெடிவிபத்துக்கான காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. அதேநேரத்தில் ரசாயனங்கள் இந்த விபத்துக்கு காரணமாக அமைத்திருக்க வாய்ப்புகள் இருப்பதாகவும் அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், சம்பவ இடத்துக்கு அமைச்சர் ஒருவரையும் அவர் அனுப்பி வைத்துள்ளார்.
துறைமுகத்தில் வெடிவிபத்து ஏற்பட்ட நிலையில் தீயின் தீவிரம் சுமார் 10 மணி நேரம் வரை நீடித்ததாக உலக செய்திகளை வெளியிட்டு வரும் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதனால் ஈரான் அரசின் முழு கவனமும் தீயை கட்டுக்குள் கொண்டு வருவது மற்றும் அணைப்பது என இருந்துள்ளது. இந்த விபத்து காரணமாக பந்தர் அப்பாஸ் பகுதியில் சுமார் 23 கிலோமீட்டர் சுற்று வட்டாரத்தில் உள்ள பள்ளிகள், அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கரும்புகை காற்றில் பரவியது இதற்கு காரணம் என தகவல் கிடைத்துள்ளது.
இந்த விபத்தில் எண்ணெய் உற்பத்தி சார்ந்து எந்த பாதிப்பும் இல்லை என ஈரானின் தேசிய எண்ணெய் பொருட்கள் சுத்திகரிப்பு மற்றும் விநியோக நிறுவனம் கூறியுள்ளது. இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “ஷாஹித் ராஜாயி துறைமுகத்தில் ஏற்பட்ட வெடிப்பு மற்றும் தீ விபத்துக்கும் எங்கள் நிறுவனம் தொடர்பான சுத்திகரிப்பு நிலையங்கள், எரிபொருள் தொட்டிகள், விநியோக வளாகங்கள் மற்றும் எண்ணெய் குழாய்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இதனால் இங்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை” என கூறப்பட்டுள்ளது.
என்ன நடந்தது? - ஈரானின் ஹார்மோஸ்கான் மாகாணம், பந்தர் அப்பாஸ் நகருக்கு அருகே உள்ள ஷாஹித் ராஜாயி துறைமுகத்தில் உள்ள சினா கன்டெய்னர் யார்டில் நேற்று பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டு தீப்பிடித்து எரிந்தது. இதனால் அப்பகுதி புகை மண்டலமாக காட்சி அளித்தது. அப்பகுதியில் இருந்து கரும்புகை மற்றும் நெருப்பு பந்து எழும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன. கட்டிடம் மற்றும் வாகனங்கள் சேதமடைந்தது தொடர்பான வீடியோவும் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு சென்று தீயை அணைக்கும் பணியிலும் மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த விபத்தில் பல கன்டெய்னர்கள் வெடித்துச் சிதறியதாக கூறப்படுகிறது. இதுவரை 14 பேர் உயிரிழந்ததாகவும் 750-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹார்மோஸ்கான் மாகாண நெருக்கடி மேலாண்மை நிறுவனத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார். பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
2020-ல் சைபர் தாக்குதல் - கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் இதே துறைமுகத்தில் மிகப்பெரிய சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இதனால் அங்கிருந்த கணினிகள் செயலிழந்து, பல நாட்களுக்கு போக்குவரத்து குளறுபடி ஏற்பட்டது.
புதிய அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா மற்றும் ஈரான் அதிகாரிகள் இடையே ஓமனில் 3-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், இந்த வெடி விபத்து நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT