Published : 27 Apr 2025 12:10 AM
Last Updated : 27 Apr 2025 12:10 AM

பஹல்காம் தாக்குதல் தீவிரவாதிகளை வேட்டையாடுங்கள்: எப்போதும் ஆதரவாக இருப்போம் என அமெரிக்கா உறுதி

பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிகளை வேட்டையாடுங்கள் என்று அமெரிக்க உளவுத் துறை தலைவர் துளசி கப்பார்ட் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலால் 26 இந்துக்கள் கொலை செய்யப்பட்டிருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. இந்த நேரத்தில் இந்தியாவுக்கு நாங்கள் துணை நிற்போம்.

தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். பிரதமர் நரேந்திர மோடி, இந்திய மக்களின் துயரத்தில் நானும் பங்கெடுக்கிறேன். பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிகளை இந்தியா வேட்டையாட வேண்டும். நாங்கள் உங்களோடு இருக்கிறோம். உங்களுக்கு எப்போதும் ஆதரவாக இருப்போம். இவ்வாறு துளசி கப்பார்ட் தெரிவித்துள்ளார்.

பிறப்பால் அமெரிக்கரான துளசி கப்பார்ட், இந்து மதத்தை தீவிரமாக பின்பற்றி வருகிறார். இவர் அமெரிக்க எம்பியாக பதவி வகித்தபோது பகவத் கீதை மீது பிரமாணம் செய்து பதவியேற்றார். அமெரிக்க புலனாய்வு அமைப்பான பிஎப்ஐயின் இயக்குநராக காஷ் படேல் பதவி வகிக்கிறார். குஜராத்தை பூர்விகமாகக் கொண்ட இவரும் கடந்த பிப்ரவரியில் பகவத் கீதை மீது பிரமாணம் செய்து பதவியேற்றார். பஹல்காம் தீவிரவாத தாக்குதல் தொடர்பான விசாரணையில் துளசி கப்பார்ட்டும், காஷ் படேலும் இந்தியாவுக்கு உதவி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அமெரிக்க அரசு கருத்து: அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் டாமி புரூஸ், வாஷிங்டனில் நேற்று முன்தினம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பாகிஸ்தான் செய்தியாளர் ஒருவர், பஹல்காம் தாக்குதலால் இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் எழுந்திருப்பது குறித்து கேள்வி எழுப்பினார். இதுகுறித்து டாமி புரூஸ் கூறியதாவது:

இந்தியாவின் பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் பலர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், வெளியுறவுத் துறை அமைச்சர் ரூபியோ ஆகியோர் பஹல்காம் தீவிரவாத தாக்குதலை மிக வன்மையாக கண்டித்துள்ளனர்.

பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு அமெரிக்கா ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறோம். தீவிரவாத தாக்குதலில் தொடர்புடையவர்களை நீதியின் முன்பு நிறுத்த வேண்டும். இவ்வாறு டாமி புரூஸ் தெரிவித்தார்.

பாகிஸ்தான் செய்தியாளர் தொடர்ந்து காஷ்மீர் விவகாரத்தை எழுப்ப முயன்றார். ஆனால் அவரது கேள்விக்கு அமெரிக்க செய்தித் தொடர்பாளர் டாமி புரூஸ் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.

சீனாவின் நயவஞ்சகம்: பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு சீன வெளியுறவுத் துறை கண்டனம் தெரிவித்தது. ஆனால் அந்த நாடு தற்போது பாகிஸ்தானுக்கு மறைமுகமாக ஆயுத உதவிகளை வழங்கி வருகிறது.

பாகிஸ்தான் விமானப் படையில் சீன தயாரிப்பான ஜேஎப்-17 ரக போர் விமானங்கள் பயன்பாட்டில் உள்ளன. இந்த போர் விமானங்களில் சீன தயாரிப்பான பி.எல்.12 ஏவுகணைகள் பொருத்தப்பட்டிருந்தன. இவை 100 கி.மீ. தொலைவு வரை பாயும் திறன் கொண்டவை.

தற்போது போர் பதற்றம் எழுந்துள்ள சூழலில் சீனாவின் தரப்பில் பாகிஸ்தானுக்கு பி.எல்.15 ரக ஏவுகணைகள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த ஏவுகணைகள் 200 கி.மீ. தொலைவு வரை பாயும் திறன் கொண்டவை ஆகும். சுமார் 100-க்கும் மேற்பட்ட பி.எல்.15 ரக ஏவுகணைகள் பாகிஸ்தான் விமானப் படையிடம் ஒப்படைக்கப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் விமானப்படையின் ஜேஎப்-17 ரக போர் விமானங்களில் பிஎல்12 ஏவுகணைகளுக்கு பதிலாக பிஎல் 15 ரக ஏவுகணைகள் பொருத்தப்பட்டு உள்ளன. இந்த புகைப்படங்கள் பாகிஸ்தான் ராணுவத்தின் சமூக வலைதளங்களில் நேற்று வெளியிடப்பட்டன. அதோடு பாகிஸ்தான் ராணுவம் தரப்பில் சீனாவுக்கு மனதார நன்றி தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பாகிஸ்தானுக்கான சீன தூதர் ஜியாங், இஸ்லாமாபாத்தில் நேற்று பாகிஸ்தான் துணை பிரதமர் முகமது இஷார் தர்ரை சந்தித்துப் பேசினார். அப்போது பிராந்திய நிலவரம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறை தெரிவித்திருக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x