Published : 25 Apr 2025 04:31 PM
Last Updated : 25 Apr 2025 04:31 PM
புதுடெல்லி: இந்தியாவுக்கு எதிராக செயல்படும் பயங்கரவாதக் குழுக்களை கடந்த 30 ஆண்டுகளாக ஆதரித்த தவறுகளை பாகிஸ்தான் செய்தது என அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் குவாஜா எம்.ஆசிப் தெரிவித்திருப்பது அந்நாட்டின் ஒப்புதல் வாக்குமூலமாக பார்க்கப்படுகிறது.
பிரிட்டிஷ் செய்தி நிறுவனமான ஸ்கை நியூஸ் விவாதத்தில் பங்கேற்ற குவாஜா எம்.ஆசிப்பிடம், "இந்த பயங்கரவாத அமைப்புகளை பாகிஸ்தான் ஆதரித்து, பயிற்சி அளித்து, நிதியளித்த நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா?" என்று கேட்கப்பட்டது. அதற்கு பாகிஸ்தான் அமைச்சர், "கடந்த 30 ஆண்டுகளாக அமெரிக்காவுக்காக நாங்கள் இதைச் செய்தோம். அமெரிக்காவுக்காக மட்டுமல்லாமல், மேற்கத்திய நாடுகள் மற்றும் இங்கிலாந்துக்காகவும் நாங்கள் இந்த மோசமான வேலையை செய்து வருகிறோம். அது ஒரு தவறு. பாகிஸ்தான் அதனால் பாதிக்கப்பட்டது.
சோவியத் - ஆப்கானிஸ்தான் போரின் போதும், 9/11-க்குப் பிறகு தலிபானுக்கு எதிரான அமெரிக்கா தலைமையிலான போரின்போதும் மேற்கு நாடுகளுடன் இஸ்லாமாபாத் (பாக். அரசு) இணைந்திருக்காவிட்டால் பாகிஸ்தானின் கடந்த காலப் பதிவு ‘குற்றச்சாட்டுக்கு இடமில்லாதது’ ஆக இருந்திருக்கும்” என்று கூறினார்.
அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளுக்காக பயங்கரவாதிகளை ஆதரிப்பதன் மூலம் ‘மோசமான வேலை’ செய்வதாக பாகிஸ்தான் அமைச்சர் ஒப்புக்கொண்டிருக்கிறார். காஷ்மீரின் பைசரன் பள்ளத்தாக்கில் 26 அப்பாவி பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, அவரது இந்தப் பேட்டி வந்திருப்பதால், இது மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT