Published : 22 Apr 2025 04:56 PM
Last Updated : 22 Apr 2025 04:56 PM
வாடிகன்: போப் பிரான்சிஸின் உடல் நாளை (புதன்கிழமை) காலை 9:00 மணிக்கு வாடிகனில் உள்ள புனித பீட்டர்ஸ் பேராலயத்துக்கு கொண்டு செல்லப்படும் என்றும் சனிக்கிழமை காலை 10:00 மணிக்கு இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்றும் வாடிகன் அறிவித்துள்ளது.
கத்தோலிக்க கிறிஸ்தவ மத தலைவரான போப் பிரான்சிஸ் நேற்று மறைந்தார். அவருக்கு வயது 88. கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்த அவர், நேற்று உயிரிழந்தார்.
நேற்று (திங்கட்கிழமை) மாலை வாடிகனில் உள்ள காசா சாண்டா மார்ட்டாவின் தேவாலயத்தில் மரணத்தை உறுதிப்படுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இதையடுத்து, அவரது உடல் சவப்பெட்டியில் வைக்கப்பட்டது. இந்த சடங்குகளுக்கு கார்டினல் கேமர்லெங்கோ கெவின் ஃபாரெல் தலைமை தாங்கினார்.
இந்நிலையில், போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கு குறித்த அறிவிப்பை வாடிகன் வெளியிட்டுள்ளது. வாடிகனின் செய்தி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "போப் பிரான்சிஸின் உடல் நாளை (புதன்கிழமை) காசா சாண்டா மார்ட்டாவின் தேவாலயத்திலிருந்து புனித பீட்டர்ஸ் பேராலயத்துக்கு காலை 9 மணிக்கு எடுத்துச் செல்லப்படும்.
இதற்கான சடங்கிற்கு புனித ரோமானிய திருச்சபையின் கமர்லெங்கோ கார்டினல் கெவின் ஃபாரெல் தலைமை தாங்குவார். புதன்கிழமை காலை 9:00 மணி முதல் இறுதிச் சடங்கு நடைபெறும் சனிக்கிழமை காலை 10:00 மணி வரை போப் பிரான்சிஸின் உடல் புனித பீட்டர்ஸ் பேராலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படும்.
சனிக்கிழமை(ஏப். 26) அன்று பக்தர்கள், கார்டினல்கள், பேராயர்கள், ஆயர்கள் மற்றும் பாதிரியார்கள் முன்னிலையில் இறுதிச் சடங்குப் பிரார்த்தனை நடைபெறும். இதற்கு கார்டினல்ஸ் கல்லூரியின் டீன் கார்டினல் ஜியோவானி பாட்டிஸ்டா ரே தலைமை தாங்குவார்.
போப் பிரான்சிஸின் ஆன்மா இளைப்பாறுவதற்காக ஒன்பது நாட்கள் துக்கம் அனுஷ்டிக்கப்படும். 9 நாட்களும் திருப்பலிகள் நடைபெறும்.
சனிக்கிழமை போப் பிரான்சிஸின் உடல் புனித பீட்டர்ஸ் பேராலயத்தில் இருந்து இறுதிச் சடங்குகளுக்காக புனித மேரி மேஜர் பேராலயத்துக்கு கொண்டு செல்லப்படும்.
இறுதி ஊர்வலம் சாண்டா மார்த்தா சதுக்கம் மற்றும் ரோமானிய தியாகிகளின் சதுக்கம் வழியாக செல்லும். பின்னர் ஊர்வலம் மணி வளைவு வழியாக செயிண்ட் பீட்டர் சதுக்கத்திற்குள் சென்று வாடிகன் பேராலயத்தின் மைய வாசல் வழியாக நுழையும்.
வாக்குமூல பலிபீடத்தில், கார்டினல் கமர்லெங்கோ இறுதிச் சடங்கு வழிபாட்டுக்கு தலைமை தாங்குவார். அதன் முடிவில் ரோமானிய போப்பாண்டவரின் உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடைபெறும்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜார்ஜ் பெர்கோகிலோ என்ற இயற்பெயர் கொண்ட போப் பிரான்சிஸ், லத்தீன் அமெரிக்காவைச் சேர்ந்த முதல் போப் என்ற பெருமையை பெற்றவர். 2013-ம் ஆண்டும் மார்ச் 13-ம் தேதி 266-வது போப்பாக தேர்வு செய்யப்பட்ட அவர், கத்தோலிக்க கிறிஸ்தவ மத நடைமுறைகளில் அதிக சீர்திருத்தங்களை மேற்கொண்டவராக அறியப்படுகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT