Published : 22 Apr 2025 06:15 AM
Last Updated : 22 Apr 2025 06:15 AM

போப் பிரான்சிஸ் மறைவு - தேவாலயங்களில் 9 நாட்கள் துக்கம் அனுசரிப்பு

வாடிகன்: கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மத தலைவரான போப் பிரான்சிஸ் நேற்று காலமானார். அவருக்கு வயது 88. அவரது மறைவு உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. போப் மறைவுக்கு உலக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மத தலைவராக போப் போற்றப்படுகிறார். கடந்த 2013 மார்ச் 13-ம் தேதி 266-வது போப்பாக பிரான்சிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த சில ஆண்டுகளாகவே போல் பிரான்சிஸ் உடல்நலமின்றி இருந்தார். அவ்வப்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். எனினும், தேவாலய பணிகளை தொடர்ந்து செய்து வந்தார்.

கடந்த பிப்ரவரியில் உடல்நலம் பாதிக்கப்பட்டதால், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 38 நாள் சிகிச்சைக்கு பிறகு, உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டதால், கடந்த மார்ச் 23-ம் தேதி வாடிகன் திரும்பினார். வயது முதிர்வு காரணமாக அவரது உடல்நிலை மீண்டும் பாதிக்கப்பட்டதால் கடந்த 14-ம் தேதி ரோம் நகரில் உள்ள மருத்துவமனையில் போப் பிரான்சிஸ் சேர்க்கப்பட்டார். அவருக்கு தீவிர சுவாச பிரச்சினை, சுவாச பாதையில் தொற்று, நிமோனியா பாதிப்பு இருப்பது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது. மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்ததில், உடல்நலம் தேறிய நிலையில், மீண்டும் வாடிகன் இல்லத்துக்கு திரும்பினார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு, கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கு அவர் ஆசி வழங்கினார். இந்நிலையில், ஈஸ்டர் பண்டிகைக்கு மறுநாளான (‘ஈஸ்டர் மன்டே’) நேற்று காலை 7.35 மணி அளவில் வாடிகனின் உள்ள தனது இல்லத்தில் போப் பிரான்சிஸ் காலமானார். அவருக்கு வயது 88.

போப் மறைவை உறுதிசெய்து வாடிகன் நிர்வாகி கார்டினல் கெவின் பேர்ரெல் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ரோம் நகரின் பிஷப் பிரான்சிஸ் காலை 7.35 மணிக்கு பிதாவின் இல்லத்துக்கு திரும்பியிருக்கிறார். கடவுள் மற்றும் அவரது தேவாலயங்களுக்கு சேவை செய்வதற்காகவே வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவர். நம்பிக்கை, துணிவு, உலகளாவிய அன்பு, குறிப்பாக ஏழைகளின் மேம்பாட்டுக்காக, நற்செய்தியில் கூறப்பட்டுள்ளபடி நாம் வாழ நமக்கு கற்றுக் கொடுத்தார்.

இயேசு கிறிஸ்துவின் உண்மையான சீடராக முன்மாதிரியாக திகழ்ந்தார். அந்த நன்றி உணர்வுடன், திருத்தந்தை பிரான்சிஸ் ஆன்மாவை, கடவுளின் எல்லையற்ற, இரக்கமுள்ள அன்புக்கு சமர்ப்பிக்கிறோம்’ என்று தெரிவித்துள்ளார்.

தேவாலயங்களில் துக்க மணி ஒலிப்பு: இதைத் தொடர்ந்து, உலகெங்கும் உள்ள தேவாலயங்களுக்கு போப் மறைவு செய்தியை கார்டினல் கெவின், முறைப்படி தெரிவித்தார். இதையடுத்து போப் பிரான்சிஸ் மறைவுக்காக உலகெங்கும் உள்ள தேவாலயங்களில் துக்க மணி ஒலிக்கப்பட்டது. போப் மறைவுக்கு உலக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அர்ஜென்டினாவின் பியூனஸ் ஐரிஸ் நகரில் கடந்த 1936 டிசம்பர் 17-ம் தேதி பிறந்தார் பிரான்சிஸ். அவரது இயற்பெயர் ஜோர்ஜ் மரியோ பெர்கோக்லியோ. கார்டினல் உட்பட பல்வேறு பதவிகளை வகித்து வந்தார்.

1,200 ஆண்டுகளில் முதல்முறையாக.. - கடந்த 2013-ம் ஆண்டு போப் பெனடிக்ட், தனது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து, புதிய போப்பாக பிரான்சிஸ் தேர்வுசெய்யப்பட்டார். அதன்மூலம் கடந்த 1,200 ஆண்டுகளில் முதல்முறையாக ஐரோப்பாவை சேராத ஒருவர் போப்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமையை பெற்றார்.

போப் பிரான்சிஸ் தனது பதவிக் காலத்தில் கருணை, அனைவரையும் உள்ளடக்கிய தன்மை, பணிவு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, ஒடுக்கப்பட்டவர்கள் மீது ஆழ்ந்த அக்கறை கொண்டு பணியாற்றினார். வாடிகனில் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வந்தார். நிதி விஷயங்கள் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். மதகுருக்கள் முறைகேடுகளில் ஈடுபடுவதை தடுக்க நடவடிக்கை எடுத்தார். பருவநிலை மாற்றத்தை தடுக்க உலக நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தினார்.

வழக்கமாக போப் மறைந்தாலோ, ராஜினாமா செய்தாலோ, வாடிகனின் நிர்வாக பொறுப்பை கார்டினல்கள் குழு ஏற்கும். அதன்படி, தற்போது அக்குழுவினர் வாடிகன் நிர்வாக பொறுப்பை ஏற்றுள்ளனர். போப்பின் இறுதிச் சடங்கு மற்றும் புதிய போப்பை தேர்ந்தெடுப்பதற்கான நடைமுறைகளை இவர்கள் மேற்கொள்வார்கள். போப் மறைந்தது முதல் புதிய போப்பை தேர்ந்தெடுப்பது வரை இடைக்கால நிர்வாகத்தில் (Interregnum) வாடிகன் இருக்கும்.

போப் பிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, வாடிகனில் அவர் வாழ்ந்த இல்லம் பூட்டப்பட்டது. தேவாலயங்களில் 9 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. போப் இறுதி சடங்கு 4 முதல் 6 நாட்களுக்குள் நடத்தப்பட வேண்டும். வாடிகனில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் போப் பிரான்சிஸ் உடல் அடக்கம் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x