Published : 21 Apr 2025 07:03 PM
Last Updated : 21 Apr 2025 07:03 PM
வாடிகன்: கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் மறைவுக்கு உலக அளவில் இரங்கல் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், அவரது எளிய வாழ்க்கை, மாதச் சம்பளம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
12 ஆண்டுகள் கத்தோலிக்க திருச்சபையை வழிநடத்திய போப் பிரான்சிஸ், ஏப்ரல் 21 திங்கட்கிழமை காலமானார். மிக நீண்ட காலமாக உடல்நலப் பிரச்சினைகளுடன் போராடி வந்த அவர், தனது 88-வது வயதில் இயற்கை எய்தியுள்ளார். கத்தோலிக்க கிறிஸ்தவ திருச்சபை உலகிலேயே அதிக சொத்து கொண்ட மத ரீதியான ஒரு நிறுவனமாக கருதப்படுகிறது. கிட்டத்தட்ட 1.3 பில்லியன் கத்தோலிக்கர்களின் தலைவரான போப் பிரான்சிஸ், ஓர் எளிமையான தலைக்கனமில்லாத நபராக, தனது வாழ்க்கையை வாழ்ந்தற்காக போற்றப்படுபவர்.
போப் பிரான்சிஸ் மாதம்தோறும் 32,000 அமெரிக்க டாலர் சம்பளமாக பெற தகுதி பெற்றிருந்த போதும், தனக்கு சம்பளம் வேண்டாம் என மறுத்து, அந்தச் சம்பளத்தை தேவாலயங்களுக்கும், அறக்கட்டளைகளுக்கும் நன்கொடையாக வழங்க செய்துள்ளார்.
போப் பிரான்சிஸின் சொத்து மதிப்பு 16 மில்லியன் அமெரிக்க டாலராக இருக்கிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன. போப்பாக பதவியேற்பதற்கு முன்பாகவே பல்வேறு பெரிய பதவிகளை வகித்துள்ளார். இருப்பினும் தனக்குச் சம்பளம் வேண்டாம் என மறுத்துள்ளாதாக கூறப்படுகிறது. இவர், சீர்திருத்தத்தை முன்னுரிமையாகக் கொண்டு செயல்பட்டார். திருச்சபை நிதிகளில் வெளிப்படைத்தன்மையை வெளிக் கொண்டுவந்தார்.
2018-ஆம் ஆண்டில் லம்போர்கினி நிறுவனம் போப் பிரான்சிஸுக்கு 2 லட்சம் டாலர்கள் மதிப்பிலான லம்போர்கினி காரை பரிசாக அளித்தது. ஆனால், போப் பிரான்சிஸ் அந்த காரை தன்னுடைய சொந்த நோக்கத்துக்காக பயன்படுத்தவில்லை. அதை வாங்கி, ஏலத்தில் விடுத்து அந்த பணத்தை எடுத்து பல்வேறு தனது பெயரில் உள்ள தொண்டு நிறுவனங்களுக்கு தானமாக வழங்கினார்.
ஆரம்பரமாக வாழ வாய்ப்பு கிடைத்தும், பணம், பதவி, அதிகாரம் ஆகியவற்றை புறந்தள்ளிவிட்டு, மனிதநேயம், பணிவு, எளிமை, கண்ணியம், ஒழுக்கம், சம நீதி உள்ளிட்ட பண்புநலன்களையே தனது வாழ்நாள் வரை கடைபிடித்தவர் போப் பிரான்சிஸ்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT