Published : 18 Apr 2025 09:51 PM
Last Updated : 18 Apr 2025 09:51 PM
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் அமெரிக்கவைச் சேர்ந்த சங்கிலித் தொடர் துரித உணவு கடைகளான கேஎஃப்சி மீது நடந்த தாக்குதல் தொடர்பாக 178 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டுப் போலீஸார் தெரிவித்தனர். அமெரிக்க எதிர்ப்புணர்வு மற்றும் அதன் நட்பு நாடான இஸ்ரேல், காசா மீது நடத்தி வரும் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கேஎஃப்சி கடைகள் மீது கும்பல் தாக்குதல் நடந்துள்ளது. இது தொடர்பாக சமீப வாரங்களாக ஏராளமானவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர் என்றும் போலீஸார் தெரிவித்தனர்.
பாகிஸ்தானின் தெற்குப் பகுதி துறைமுகநகரமான கராச்சி, கிழக்குப் பகுதி நகரமான லாகூர் மற்றும் தலைநகர் இஸ்லாமாபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களில், ஆயுதம் ஏந்தியவர்கள் கேஎஃப்சி கடைகள் மீது தாக்குதல் நடத்தி சேதப்படுத்திய 11 சம்பவங்கள் நடந்துள்ளன என போலீஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த வாரத்தில் லாகூரின் புறநகர் பகுதியில் உள்ள ஒரு கேஎஃப்சி ஊழியர், அடையாளம் தெரியாத நபரொருவரால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என்று தன் பெயரை வெளியிடவிரும்பாத போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்தக் கொலை, அரசியல் காரணங்களுக்காக நடந்ததா அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா என விசாரணை நடந்து வருவதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
லாகூரில் இரண்டு கேஎஃப்சி கடைகள் மீது தாக்குல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, நகரைச் சுற்றியுள்ள 27 கடைகளுக்கும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஐந்து தாக்குதல்கள் தடுக்கப்பட்டுள்ளது என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். “இந்தத் தாக்குதல்களின் பின்னணியில் தனிநபர்கள் மற்றும் குழுக்களுக்கு உள்ள பங்குகள் குறித்து நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம்" என்று லாகூரைச் சேர்ந்த மூத்த போலீஸ் அதிகாரி பைசல் கம்ரான் தெரிவித்தார்.
கேஎஃப்சி கடைகள் பாகிஸ்தானில் நீண்ட காலமாகவே அமெரிக்காவின் அடையாளமாகவே பார்க்கப்பட்டு வருகிறது. மேலும், சமீபத்திய தசாப்தங்களில் அதிகரித்து வரும் அமெரிக்க எதிர்ப்புணர்வுகளால் தாக்குதல் மற்றும் போராட்டங்களையும் சந்தித்து வருகிறது. அமெரிக்க தயாரிப்புகள் சில நுகர்வோர்களால் புறக்கணிக்கப்பட்டு வரும் நிலையில் பாகிஸ்தான் உள்ளூர் தயாரிப்புகள் குளிர்பான சந்தையில் வேகமாக வளர்ந்து வருகின்றன.
இதனிடையே, இந்த மாதத்தின் தொடக்கத்தில், அமெரிக்க மற்றும் இஸ்ரேல் பொருளாதாரத்தை ஆதரிக்கும் பொருள்கள் மற்றும் பிராண்டுகளை புறக்கணிக்கமாறு உள்ளூர் மதத் தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். ஆனால், மக்கள் அமைதியாக இருக்குமாறும், பொருள்களை சேதப்படுத்தாமல் இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT