Published : 09 Apr 2025 05:20 PM
Last Updated : 09 Apr 2025 05:20 PM

17 ஆண்டுகள் பின்னோக்கி... - ட்ரம்ப் வரிவிதிப்பால் சீன நாணய மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி!

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வரிவிதிப்பால் உலகின் பல நாடுகள் கடுமையான பொருளாதார பின்னடைவுகளை சந்தித்து வரும் நிலையில், உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமான சீனாவின் நாணயமான ‘யுவான்’ மதிப்பு 17 ஆண்டுகளுக்கு முந்தைய மதிப்பு அளவுக்கு சரிந்துள்ளது.

சீன இறக்குமதிகள் மீது 104% வரி உட்பட அமெரிக்காவின் புதிய வரிகள் புதன்கிழமை (ஏப்.9) முதல் அமலுக்கு வந்துள்ளன. இதனால், சீன நாணயத்தின் மதிப்பு கடுமையான சரிவைச் சந்தித்துள்ளது. சீனா நாணயமான யுவான் 2007-ன் மதிப்புக்கு சரிந்தது. ஒரே இரவில் நடந்துள்ள இந்த சரிவு வரலாறு காணாதது. அமெரிக்க டாலருக்கு நிகரான யுவானின் மதிப்பு 7.3498 ஆக சரிந்துள்ளது.

இந்நிலையில், சீனா தனது உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாக்க உறுதியான மற்றும் வலிமையான நடவடிக்கைகளை எடுக்கப் போவதாக உறுதி அளித்துள்ளது. சீனா மீது ட்ரம்ப் விதித்த கூடுதலான 50% வரிகளுக்குப் பிறகு, சீனா அமெரிக்கா மீது எந்த புதிய வரிகளையும் அறிவிக்கவில்லை. அமெரிக்கா மீதான தனது பழிவாங்கும் வரிகளை திரும்பப் பெறுவதற்கான ட்ரம்ப் விதித்த காலக்கெடுவை பூர்த்தி செய்ய சீனா மறுத்ததைத் தொடர்ந்து அந்நாட்டின் மீதான கூடுதல் வரிகள் அமலுக்கு வந்தன.

அமெரிக்க வரி விதிப்பை சமாளிக்க அண்டை நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்த சீன அதிபர் ஜி ஜின்பிங் உறுதியளித்துள்ளார். இன்று இது தொடர்பாக பேசிய ஜி ஜின்பிங், "அமெரிக்காவுடனான சீனாவின் வரிவிதிப்புப் போர் தீவிரமடைந்ததால், வேறுபாடுகளை "சரியான முறையில்" நிர்வகிப்பதன் மூலமும், விநியோகச் சங்கிலி உறவுகளை மேம்படுத்துவதன் மூலமும் அண்டை நாடுகளுடனான உறவுகளை சீனா வலுப்படுத்தும்" என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுடனான சீனாவின் உறவு பதற்றமான சூழலை உருவாக்கி இருப்பதால், சீனா சமீபத்தில் இந்தியாவுடனான எல்லை பதற்றங்களைக் குறைத்தது. மேலும், ஜப்பான் மற்றும் தென் கொரியா போன்ற பிற அண்டை நாடுகளுடனான தனது உறவுகளையும் மேம்படுத்த முயன்றது கவனிக்கத்தக்கது.

எண்ணெய் விலை சரிவு: சீன நாணயத்தின் சரிவு எதிரொலியாக, கச்சா எண்ணெய் விலை 4%-க்கும் மேல் சரிந்தது. அமெரிக்க கச்சா எண்ணெய் விலை 4.4% சரிந்து ஒரு பீப்பாய் 56.96 டாலர்களாக இருந்தது. தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கத்தின் விலையும் 0.2% குறைந்தது. | வாசிக்க > அமெரிக்கா - சீனா வர்த்தகப் போரில் இந்தியாவுக்கு சாதகமான சூழல் - பட்டியலிட்டு விளக்கும் ரகுராம் ராஜன்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x