Published : 05 Apr 2025 03:04 PM
Last Updated : 05 Apr 2025 03:04 PM
கொழும்பு: இந்தியாவின் பாதுகாப்புக்கும், ஸ்திரத்தன்மைக்கும் தீங்கு விளைவிக்கும் வகையில் தங்கள் பிரதேசத்தை பயன்படுத்த இலங்கை அனுமதிக்காது என்று அந்நாட்டு அதிபர் அனுர குமார திசநாயக்க உறுதிபட தெரிவித்துள்ளார்.
அரசு முறைப்பயணமாக இலங்கை சென்றுள்ள இந்தியப் பிரதமர் மோடியுடனான பிரதிநிதிகள் அளவிலான பேச்சுவார்த்தைக்கு பின்பு கொழும்புவில் பேசிய அதிபர் அனுர திசநாயக்க, "வளர்ச்சி, புதுமை மற்றும் செயல்திறனை மேம்படுத்த டிஜிட்டல் பொருளாதாரத்தை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை இலங்கை அங்கீகரிக்கிறது. இந்த கொள்கையின் தொடக்கமாக பிரதமர் மோடியும் நானும் பல்வேறு மட்டத்தில் டிஜிட்டல் மயமாக்கலில் சாத்தியமான கூட்டாண்மை குறித்து விவாதித்தோம். இலங்கையின் தனித்துவமான டிஜிட்டல் அடையாளத் திட்டத்துக்காக இந்திய அரசு வழங்கியுள்ள ரூ.300 கோடி நிதியுதவிக்காக நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
இலங்கை அரசு அவருக்கு (பிரதமர் நரேந்திர மோடி) இலங்கை அரசின் மிக உயரிய விருதான இலங்கை மித்ர விபூஷணா விருதினை வழங்க முடிவு செய்துள்ளது என்பதை அறிவிப்பதில் நான் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த விருதுக்கு அவர் மிகவும் தகுதியானவர். இதனை நாங்கள் பூரணமாக நம்புகிறோம்.
இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான உறவு மிகவும் நெருக்கமானது. நீண்ட காலத்துக்கு முன்பிருந்தே அண்டை நாடுகளான நாம் ஆழமான வரலாறு, கலாச்சாரம் மற்றும் மத ரீதியிலான உறவுகளைக் கொண்டுள்ளோம். இந்த உறவு இரு நாடுகளுக்கு இடையே பகிரப்பட்ட மதிப்பீடுகள், பரஸ்பர மரியாதை மற்றும் ஒத்த விருப்பங்களால் கட்டமைக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
முன்னதாக, இரு நாட்டுத் தலைவர்களும் பிரதிநிதிகள் அளவிலான பேச்சுவார்த்தைக்காக சந்தித்துக் கொண்டனர். கூட்டத்துக்கு முன்பாக இருவரும் பரஸ்பர வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர். இந்தியாவின் பிரிதிநிதிகளாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்தப் பேச்சுவார்த்தையின் போது, இரண்டு நாட்டு தலைவர்கள் முன்னிலையில், இந்தியா - இலங்கை - யுஏஇ இடையே முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது.
பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது: இலங்கை அரசின் மிக உயரிய விருதான இலங்கை மித்ர விபூஷணா விருதினை அந்நாட்டு அதிபர் அனுர குமார திசநாயக்க சனிக்கிழமை பிரதமர் மோடிக்கு வழங்கினார். இதில் உள்ள தம்மச் சக்கரம் இரண்டு நாடுகளின் கலாச்சார மரபுகளை வடிவமைக்க பகிரப்பட்ட பவுத்த பாரம்பரியத்தை பிரதிபலிக்கிறது. நெற்கதிர்களால் அலங்கரிக்கப்பட்ட புன்னிய கலசம் செழிப்பு மற்றும் புதுப்பித்தலை குறிக்கிறது. நவ ரத்தினங்கள் இரண்டு நாடுகளுக்கு இடையிலான மதிப்புமிக்க மற்றும் நீடித்த நட்புறவைக் குறிக்கிறது. இது தாமரை இதழ்களால் அலங்கரிக்கப்பட்ட ஒரு பூமிக்குள் சித்தரிக்கப்பட்டுள்ளது.
இறுதியாக சூரியன் சந்திரன் கடந்த காலத்தில் இருந்து எதிர்காலம் வரை தொடரும் முடிவுறா பிணைப்பினைக் குறிக்கிறது. இந்த கூறுகள் எல்லாம் இரண்டு நாடுகளுக்கு இடையிலான கலாச்சார, மத ரீதியிலான தொடர்புகளை அழகாக எடுத்துக்காட்டுகின்றன.
முன்னதாக, மூன்று நாள் பயணமாக இந்திய பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை மாலை இலங்கை சென்று சேர்ந்தார். அங்கு அவரை இலங்கையின் முக்கிய அமைச்சர்கள் விமானநிலையத்துக்குச் சென்று வரவேற்றனர். பின்பு இன்று பிரதமர் மோடிக்கு அங்கு சம்பிரதாய அணிவகுப்பு மரியாதை வரவேற்பு அளிக்கப்பட்டது. அதில், அந்நாட்டு அதிபர் அனுர குமார திசநாயக்க கலந்து கொண்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT