Published : 27 Mar 2025 03:26 PM
Last Updated : 27 Mar 2025 03:26 PM

‘இந்தியா வருகிறார் புதின்’ - ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி தகவல்

செர்ஜி லாவ்ரோவ் | கோப்புப் படம்

மாஸ்கோ: பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியா செல்ல இருப்பதாகவும், அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்தார்.

ரஷ்யாவுக்கான இந்திய தூதரகமும், ரஷ்ய சர்வதேச விவகார கவுன்சிலும் (RIAC) இணைந்து நடத்திய "ரஷ்யா மற்றும் இந்தியா: ஒரு புதிய இருதரப்பு நிகழ்ச்சி நிரலை நோக்கி" என்ற தலைப்பிலான மாநாடு மாஸ்கோவில் நடைபெற்றது.

இதில், காணொலி காட்சி வாயிலாக உரையாற்றிய செர்ஜி லாவ்ரோவ், “அதிபர் விளாடிமிர் புதின் இந்திய அரசாங்கத் தலைவரின் அழைப்பை ஏற்றுக்கொண்டார். இந்தியக் குடியரசுக்கு ரஷ்யத் தலைவர் வருகை தர உள்ளதை அடுத்து அதற்கான ஏற்பாடுகள் தற்போது செய்யப்பட்டு வருகின்றன.

நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து முதல் வெளிநாட்டுப் பயணமாக கடந்த ஆண்டு ரஷ்யாவுக்கு வருகை தந்தார். இப்போது எங்கள் முறை.” என்று தெரிவித்தார்.

இருப்பினும், பயணத்தின் தேதிகள் இன்னும் வெளியிடப்படவில்லை.

கடந்த ஆண்டு ஜூலையில் பிரதமர் மோடி ரஷ்யா சென்றார். கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளில் மோடியின் முதல் ரஷ்ய பயணமாக அது இருந்தது. ஏனெனில், அதற்கு முன்பு 2019 ஆம் ஆண்டு தூர கிழக்கு நகரமான விளாடிவோஸ்டாக்கில் நடந்த பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி ரஷ்யா சென்றார்.

கடந்த ஆண்டு ரஷ்யா சென்றபோது, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை இந்தியாவுக்கு வருமாறு பிரதமர் மோடி அழைத்தார். இந்த அழைப்பை ஏற்று புதின் இந்தியா வர உள்ளார்.

ரஷ்ய வெற்றியின் 80-ம் ஆண்டு தினம் வரும் மே 9-ம் தேதி மாஸ்கோவில் உள்ள செஞ்சதுக்கத்தில் கொண்டாடப்பட இருக்கிறது. இதில் கலந்து கொள்ள இந்திய பிரதமர் மோடி உள்பட பல நாடுகளின் தலைவர்களுக்கு ரஷ்யா அழைப்பு விடுத்துள்ளது. இந்த அழைப்பை ஏற்று பிரதமர் மோடி ரஷ்யாவுக்கு வர வாய்ப்பு உள்ளதாக ரஷ்ய ஊடகமான டாஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த கொண்டாட்டத்தின்போது ரஷ்ய ராணுவ அணிவகுப்புடன் இந்திய ராணுவ அணிவகுப்பும் கலந்து கொள்ள வாய்ப்பு உள்ளதால், அதற்கு ஏற்ப பயிற்சிகளை மேற்கொள்ள இந்திய ராணுவம் ஒரு மாதம் முன்பாகவே வரலாம் என்றும் டாஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x