Published : 18 Mar 2025 10:46 PM
Last Updated : 18 Mar 2025 10:46 PM

ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக ட்ரம்ப் - புதின் பேச்சுவார்த்தை: 2 மணி நேரத்தை தாண்டிய போன் உரையாடல்!

உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இருவரும் செவ்வாய்க்கிழமை (மார்ச் 18) தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இந்திய நேரப்படி இரவு 8 மணியளவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய அதிபர் புதினை தொலைபேசி வாயிலாக அழைத்தார். இந்த அழைப்பில் உக்ரைன் - ரஷ்ய போர் நிறுத்தம் குறித்து இருவரும் பேசி வருகின்றனர். கடந்த 2 மணி நேரமாக நடந்து வரும் இந்த பேச்சுவார்த்தை நல்லபடியாக செல்வதாக அமெரிக்க வெள்ளை மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கான வழிகளைக் கண்டறிய இரு நாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் இந்த போரில் இதுவரை பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இன்னொரு பக்கம் உக்ரைனின் அதிகமான பகுதிகளை ரஷ்யாவிற்கு விட்டுக்கொடுக்க ட்ரம்ப் ஒப்புக்கொள்ளக்கூடும் என்று ஐரோப்பிய நாடுகள் கவலைப்படுகின்றன. இன்றைய தொலைபேசி அழைப்பு குறித்தும் உக்ரைனுடன் அமெரிக்கா கலந்தாலோசிக்கவில்லை என்பதும் அவர்களின் கவலைக்கு ஒரு காரணம்.

பின்னனி என்ன? - கடந்த 2022 பிப்ரவரி மாதம் உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்தது. உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்ததுடன், ஆயுத உதவியும் வழங்கின. இதற்கிடையே, இந்த போரை நிறுத்த பிரதமர் மோடி தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார். கடந்த ஜனவரியில் அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்டு ட்ரம்பும், போரை நிறுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறார்.

இதுதொடர்பாக சவுதி அரேபிய தலைநகர் ரியாத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கடந்த 11-ம் தேதி நடந்த பேச்சுவார்த்தையின்போது 30 நாள் போர் நிறுத்த திட்டத்தை அமெரிக்கா முன்மொழிந்தது. இதை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஏற்றுக் கொண்டார். ஆனால் ரஷ்யா உடனடியாக ஏற்றுக்கொள்ளவில்லை. ரஷ்யா போர் நிறுத்தத்தை ஏற்காவிட்டால், பொருளாதார தடை விரிவுபடுத்தப்படும் என்று அமெரிக்கா மற்றும் ஜி7 நாடுகள் கடந்த 14-ம் தேதி எச்சரிக்கை விடுத்திருந்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x