Published : 16 Mar 2025 01:19 PM
Last Updated : 16 Mar 2025 01:19 PM
வாஷிங்டன்: மனிதர்களை செவ்வாய் கிரகத்தில் குடியேறச் செய்வது குறித்து பல்வேறு தருணங்களில் எலான் மஸ்க் பேசி உள்ளார். இந்நிலையில், அடுத்த ஆண்டு இறுதியில் செவ்வாய் கிரகத்துக்கு டெஸ்லாவின் ‘ஆப்டிமஸ்’ ஹியூமனாய்ட் ரோபோவை ஸ்டார்ஷிப் விண்கலன் மூலம் அனுப்ப திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
“அடுத்த ஆண்டு இறுதியில் செவ்வாய் கிரகத்துக்கு ஸ்டார்ஷிப் புறப்பட உள்ளது. அதில் ஆப்டிமஸ் ரோபோவும் பயணிக்கிறது. இந்த தரையிறங்கும் முயற்சி வெற்றிகரமாக நடந்தால் 2029 வாக்கில் மனிதர்கள் அங்கு தரையிறங்க வாய்ப்புள்ளது.” என எலான் மஸ்க் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளார்.
உலகின் சக்திவாய்ந்த மற்றும் பெரிய விண்கலனாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் அறியப்படுகிறது. இருப்பினும் செவ்வாய் கிரகத்தில் அது வெற்றிகரமாக தரையிறங்குவதை உலகுக்கு நிரூபிக்க வேண்டிய அவசியம் உள்ளது. அமெரிக்காவின் நாசாவும் இதே விண்கலனை கொண்டு தான் நிலவில் மனிதர்களை மீண்டும் தரையிறங்க செய்யும் முயற்சியை மேற்கொண்டுள்ளது. அண்மையில் ஸ்டார்ஷிப் சோதனை ஓட்டத்தின் போது வெடித்தது. அது இந்த முயற்சியில் கொஞ்சம் பின்னடைவாக அமைந்துள்ளது.
மஸ்கின் செவ்வாய் கிரக ஆர்வம்: ‘கடைசியாக மனிதர்கள் நிலவில் தரையிறங்கி அரை நூற்றாண்டு காலம் கடந்துவிட்டது என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இது மனித நாகரிகத்தின் உயர்ந்த அடையாளமாக இருக்க முடியாது.
மானுடர்களுக்கு நிலவில் பேஸ் (மூன் பேஸ்) இருக்க வேண்டும், செவ்வாய் கிரகத்தில் நகரங்கள் இருக்க வேண்டும். மனிதர்கள் நட்சத்திரங்களுக்கு இடையே இருக்க வேண்டும்’ என கடந்த 2023-ல் மஸ்க் கூறியுள்ளார்.
தற்போது சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கி உள்ள விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸை மீட்டு வர மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT