Published : 15 Mar 2025 12:21 PM
Last Updated : 15 Mar 2025 12:21 PM
புளோரிடா: சர்வதேச விண்வெளி மையத்தில் கடந்த 9 மாத காலமாக சிக்கியுள்ள இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அமெரிக்க விண்வெளி வீரர் வில்மோர் ஆகியோரை பூமிக்கு அழைத்து வர ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் (க்ரூ-10) விண்கலன் வெற்றிகரமாக புறப்பட்டுள்ளது.
டிராகன் விண்கலனில் தற்போது சர்வதேச விண்வெளி மையத்துக்கு புறப்பட்டுள்ள விண்வெளி வீரர்களிடம் தங்களது பொறுப்புகளை ஒப்படைத்து விட்டு சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் பூமி திரும்புகின்றனர். சனிக்கிழமை பின்னிரவு டிராகன் விண்கலன் சர்வதேச விண்வெளி மையத்தை அடையும் என தகவல். அடுத்த வாரம் இதே விண்கலனில் அவர்கள் பூமி திரும்ப உள்ளனர். புளோரிடா கடலில் அவர்களது விண்கலன் ஸ்பிளாஷ் டவுனாக உள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஸ்பேஸ் எக்ஸ் மூலம் விண்வெளி மையத்துக்கு சென்ற இரண்டு விண்வெளி வீரர்களும் பூமி திரும்புகின்றனர். டிராகன் (க்ரூ-10) விண்கலனில் அமெரிக்காவைச் சேர்ந்த 2 பேர் மற்றும் ஜப்பான், ரஷ்யாவை சேர்ந்த ஒருவர் என நான்கு பேர் தற்போது விண்வெளி மையத்துக்கு சென்றுள்ளனர்.
பின்னணி என்ன? - அமெரிக்காவின் போயிங் நிறுவனம், அந்த நாட்டின் விண்வெளி அமைப்பான நாசா உடன் இணைந்து போயிங் ஸ்டார்லைனர் என்ற விண்கலத்தை உருவாக்கியது. இந்த புதிய விண்கலத்தில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் ஆகியோர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 5-ம் தேதி சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்றனர்.
இருவரும் 10 நாட்கள் ஆய்வு செய்துவிட்டு பூமிக்கு திரும்ப திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு இருவரும் பூமிக்கு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி ஸ்டார்லைனர் விண்கலம், ஆட்கள் இன்றி வெறுமையாக பூமிக்கு திரும்பியது.
இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர் 28-ம் தேதி ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி மையத்துக்கு அனுப்பப்பட்டது. இந்த விண்கலத்தில் 4 வீரர்களுக்கு பதிலாக இருவர் மட்டுமே சென்றனர். தற்போது சர்வதேச விண்வெளி மையத்தில் சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் மற்றும் டிராகன் விண்கலத்தில் அனுப்பப்பட்ட அமெரிக்க வீரர் நிக் ஹேக், ரஷ்ய வீரர் அலெக்சாண்டர் ஆகியோர் உட்பட 7 பேர் உள்ளனர்.
சுனிதா வில்லியம்ஸும், வில்மோரும் சுமார் 9 மாதங்களுக்கும் மேலாக விண்வெளியில் தங்கி உள்ளனர். அவர்களுக்கு பதிலாக புதிய வீரர்களை சர்வதேச விண்வெளி மையத்துக்கு அனுப்புவதில் தொடர்ந்து காலதாமதம் ஏற்பட்டு வந்தது.
அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்டோரை பூமிக்கு அழைத்து வரும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. இதன்படி ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் விண்கலம் கடந்த 12-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட இருந்தது. ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடைசி நேரத்தில் விண்கலம் செலுத்தப்படுவது நிறுத்தப்பட்டது.
மார்ச் 14-ம் தேதி அமெரிக்காவின் புளோரிடா கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து பால்கன் 9 ஏவுகணை மூலம் ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் விண்ணில் செலுத்தப்படும் என நாசா அறிவித்தது. அதன்படி தற்போது வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT