Published : 05 Mar 2025 02:17 PM
Last Updated : 05 Mar 2025 02:17 PM

‘அமெரிக்கா போரை விரும்பினால் நாங்களும் தயார்’ - வரி விதிப்பு விவகாரத்தில் ட்ரம்புக்கு சீனா பதிலடி

பெய்ஜிங்: "அமெரிக்கா போரை விரும்பினால் சீனா இறுதி வரை போராடத் தயாராக இருக்கிறது" என்று அமெரிக்காவிலுள்ள சீனத் தூதரகம் இன்று(புதன்கிழமை) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்காவிலுள்ள சீனத் தூதரகம் அதன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "ஃபெண்டானில் விவகாரத்தில் அமெரிக்கா உண்மையிலேயே தீர்வு காண விரும்பினால், அதற்கு சரியான வழி, மற்றவரை சமமாக நடத்துவதன் மூலம் சீனாவுடன் ஆலோசனை நடத்துவதே. ஒருவேளை அமெரிக்கா போரை விரும்பினால், அது வரி விதிப்பு போர், வர்த்தகப் போர் அல்லது வேறு எந்த வகையான போராக இருந்தாலும் சரி இறுதி வரை போராட நாங்கள் தயார்" என்று தெரிவித்துள்ளது. இதனிடையே, சீன பொருள்கள் மீதான அமெரிக்காவின் வரி விதிப்புக்கு ஃபெண்டனில்(வலி நிவாரணியாக பரிந்துரைக்கப்படும் ஒருவகை மருந்து) விவகாரம் ஒரு அற்பமான சாக்கு என்று சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாட்டின் உரிமைகள் மற்றும் நலன்களை பாதுகாக்க சீனா எடுத்துள்ள நடவடிக்கைகள் சட்டப்பூர்வமானவை, அவசியமானவை. பெண்டானில் விவகாரத்தைப் பொறுத்தவரை அமெரிக்காவைத் தவிர வேறு யாரும் அதற்கு பொறுப்பு இல்லை. அமெரிக்க மக்கள் மீதான மனிதாபிமானம் மற்றும் நல்லெண்ண உணர்வின் அடிப்படையில், அமெரிக்காவுடன் இணைந்து நாங்கள் வலுவான நடவடிக்கை எடுத்துள்ளோம்.

எங்களின் முயற்சிகளை அங்கீகரிப்பதற்கு பதிலாக, அமெரிக்கா எங்கள் மீது பழி போட்டும், வரிகளை விதித்தும் சீனாவை அழுத்த முயற்சி செய்கிறது. அவர்களுக்கு உதவியதற்காக அவர்கள் எங்களைத் தண்டிக்கிறார்கள். இது ஒரு போதும் அமெரிக்காவின் பிரச்சினையைத் தீர்க்கப் போவது இல்லை. மேலும் போதை பொருள் ஒழிப்புத் தொடர்பான நமது பேச்சுவார்த்தைகள் மற்றும் ஒத்துழைப்பை குறைத்தும் மதிப்பிடுகிறது." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபெண்டானில் விவாகரத்தைக் காரணம் காட்டி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் சீன பொருள்களுக்கு ஏற்கனவே அறிவித்திருந்த 10 சதவீத வரியுடன் கூடுதலாக 10 சதவீதம் வரியை செவ்வாய்க்கிழமை அறிவித்து அமல்படுத்தியது. இந்த புதிய கூடுதல் வரி விதிப்பு, கனடா, மெக்சிகோ பொருள்களுக்கான 25 சதவீத வரி விதிப்புடன் செவ்வாய்க்கிழமை முதல் அமலுக்கு வந்தது.

சீனாவின் எதிர்நடவடிக்கை: ட்ரம்பின் கூடுதல் வரிவிதிப்புகளுக்கான எதிர்நடவடிக்கையாக, சீனாவுக்கு அமெரிக்கா ஏற்றுமதி செய்யும் பல்வேறு விவசாய பொருள்களுக்கு சீனா பதில் நடவடிக்கையாக கூடுதல் வரி விதித்துள்ளது. அதன்படி, சோயாபீன்ஸ், சோளம், பால் பொருள்கள் மற்றும் மாட்டிறைச்சி போன்ற பொருள்களுக்கு10 சதவீதம் முதல் 15 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படுவதாக சீன நிதியமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

அமெரிக்கா ஏற்றுமதி செய்யும், சோயாபீன்ஸ், சோளம், பன்றி இறைச்சி, மாட்டிறைச்சி, கடல்வாழ் பொருள்கள், பழங்கள், காய்கறிகள் மற்றும் பால் பொருள்கள் போன்றவை சீனாவின் 10 சதவீத கூடுதல் வரி வித்திப்பில் அடங்கும். அதேபோல், கோழி, கோதுமை, மக்காச்சோளம் மற்றும் பருத்திக்கு 15 சதவீதம் வரி விதிக்கப்படுவதாக சீன நிதியமைச்கம் தெரிவித்துள்ளது. அதேபோல் அமெரிக்காவின் 25 ஏற்றுமதி இறக்குமதி நிறுவனங்களுக்கும் சீனா கட்டுப்பாடு விதித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x