Published : 04 Mar 2025 02:45 PM
Last Updated : 04 Mar 2025 02:45 PM

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் வர்த்தக வரிவிதிப்புக்கு சீனா, கனடா, மெக்சிகோ பதிலடி

வாஷிங்டன்: சீனா, கனடா, மெக்சிகோவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கான கூடுதல் வரிவிதிப்பு செவ்வாய்க்கிழமை முதல் அமல்படுத்தப்படும் என்று ட்ரம்ப் நிர்வாகம் உறுதிப்படுத்தியதைத் தொடர்ந்து, சம்மந்தப்பட்ட நாடுகள் பதிலடி கொடுக்கப் போவதாக அறிவித்துள்ளன. இது வட அமெரிக்கா முழுவதும் கடுமையான வர்த்தகப் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க அதிபரின் இந்த முடிவினைக் கண்டித்துள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இது அநீதியானது என்று தெரிவித்துள்ளார். பிப்ரவரி மாதம் டொனால்ட் ட்ரம்ப் இந்த வரித் திட்டத்தை அறிவித்தபோது அதற்கு எதிராக ட்ரூடோ தெரிவித்திருந்த அமெரிக்கப் பொருட்களுக்கான எதிர்வரி அறிவிப்பை திங்கள்கிழமை அவர் வெளியிட்டார். அதுகுறித்து ட்ரூடோ, “முதல் கட்டமாக, கனடாவுக்குள் இறக்குமதியாகும் சுமார் 30 பில்லியன் (20.6 பில்லியன் அமெரிக்க டாலர்) கனேடியே டாலர் மதிப்புள்ள அமெரிக்க பொருள்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும். அமெரிக்கா தனது முடிவினைத் திருப்பப் பெறாதபட்சத்தில் இந்த உத்தரவு நியூயார்க் நேரப்படி நள்ளிரவு 12.01 முதல் அமலுக்கு வரும்.

இரண்டாவது கட்டமாக, அடுத்த மூன்று வாரங்களில் சுமார் 125 கனேடிய டாலர் மதிப்புள்ள அமெரிக்க பொருள்களுக்கு 25 சதவீதம் வரிகள் விதிக்கப்படும். அதற்கு அடுத்தபடியாக, முக்கிய துறைகளான, வானங்கள், எஃகு, அலுமினியம் போன்றவைகளுக்கு வரி விதிக்கப்படும். அமெரிக்கா கூடுதல் வரி தொடர்பான தனது முடிவினை திரும்பப் பெறும் வரையில் எங்களுடைய வரிகளும் தொடரும்" என்று தெரிவித்தார்.

இதனிடையே மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாம் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் பேசுகையில், “மாற்றுத்திட்டங்கள் தயாராக உள்ளன. எங்களிடம் பிளான் பி, சி, டி கைவசம் உள்ளன. அமெரிக்காவின் எந்த ஒரு நடவடிக்கைக்கும் பதிலடி கொடுக்க மெக்சிகோ தயாராக உள்ளது.” என்றார்.

இந்தநிலையில், வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு கொள்கைகள் குறித்தும், வரிவிதிப்பை நிறுத்துவது குறித்தும் மெக்சிகோ மற்றும் அமெரிக்க உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தைகள் மிகவும் இணக்கமானதாக இருந்தது என்றும், இருநாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு நன்றாகவே உள்ளது என்று மெக்சிகோ அதிபர் தெரிவித்திருந்தார்.

இதனிடையே, திட்டமிட்டபடி, நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் கனடா மற்றும் மெக்சிகோ நாட்டுப் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிப்புகள் தொடங்கும்" என்று திங்கள் கிழமை அமெரிக்க அதிபர் தெரிவித்திருந்தார். எல்லைப்பாதுகாப்பு, போதை பொருட்கள் நடமாட்டத்தைத் தடுப்பது, சட்டவிரோத குடியேற்றத்தை தடுத்து நிறுத்துவதற்காகவே இந்த வரி விதிப்புகள் என்று தனது செயலை நியாயப்படுத்தியிருந்த அதிபர் ட்ரம்ப், கனடா மற்றும் மெக்சிகோ உடனான அமெரிக்காவின் வர்த்தக பற்றாக்குறையை சரி செய்யவும், அமெரிக்காவுக்கு மீண்டும் உற்பத்தி சார்ந்த வேலை வாய்ப்புகளைக் மீண்டும் கொண்டு வரவும் இந்த வரி விதிப்பு என்று தெரிவித்திருந்தார்.

ட்ரம்ப்பின் இந்த வரி அறிவிப்பு பங்குச்சந்தையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. திங்கள்கிழமை வர்த்தகத்தின் போது, எஸ் அண்டி பி 500 குறியீடு 2 சதவீதம் குறைந்தது. ட்ரம்பின் இந்த முடிவு பணவீக்கத்தை அதிகப்படுத்தும், விநியோக சங்கிலியை பாதிக்கும், வட அமெரிக்காவில் வர்த்தக பதற்றத்தை ஏற்படுத்தும் என்று பொருளாதார வல்லுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x