Published : 04 Mar 2025 12:50 AM
Last Updated : 04 Mar 2025 12:50 AM

புதினை பற்றி கவலைப்படுவதில் நேரத்தை செலவிடக்கூடாது: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கருத்து

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினைப் பற்றி கவலைப்படுவதில் நேரத்தை நாம் செலவிடக் கூடாது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

2022-ல் தொடங்கிய ரஷ்யாவுடனான போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசு செயல்பட்டு வந்தது. அமெரிக்காவின் அதிநவீன ஏவுகணைகள் உள்பட ராணுவத் தளவாடங்களை உக்ரைன் நாட்டுக்கு அமெரிக்கா வழங்கி உதவி வந்தது.

இந்நிலையில், அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள டொனால்டு ட்ரம்ப், ரஷ்யா, உக்ரைன் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளை முன்னெடுத்தார்.

மேலும், நேட்டோவில் இடம்பெறுவதற்கான திட்டத்தை உக்ரைன் மறந்துவிட்டு போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்றும் ரஷ்யாவுக்கு ஆதரவாக கருத்துகளை அதிபர் ட்ரம்ப் வெளியிட்டார்.

இந்நிலையில், கடந்த வாரம் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்ட உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கிக்கும், அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கும் இடையேயான பேச்சுவார்த்தை மோதலில் முடிவடைந்தது. இதனால், கூட்டு செய்தியாளர்கள் சந்திப்பையும் விருந்தையும் புறக்கணித்துவிட்டு அங்கிருந்து உக்ரைனுக்கு அதிபர் ஜெலன்ஸ்கி புறப்பட்டுச் சென்றுவிட்டார். இதைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் உக்ரைனுக்கு ஆதரவாக ஐரோப்பிய நாடுகளும் கருத்துகளை தெரிவித்தன.

இந்லையில், சமூக வலைதளப் பக்கத்தில் அதிபர் ட்ரம்ப் நேற்று வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினைப் பற்றி கவலைப்படுவதில் குறைவான நேரத்தை நாம் செலவிட வேண்டும். புலம்பெயர்ந்த மக்களின் பாலியல் வன்கொடுமை கும்பல்கள், போதைப் பொருள் கும்பல், கொலைகாரர்கள் உள்ளிட்டோர் நம் நாட்டுக்குள் ஊடுருவுவதைப் பற்றி யோசிக்க அதிக நேரத்தை செலவிட வேண்டும். இதனால், நாம் ஐரோப்பிய நாடுகள் போன்று மாறுவதை தடுக்க முடியும். இவ்வாறு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x