Published : 03 Mar 2025 05:51 AM
Last Updated : 03 Mar 2025 05:51 AM

உக்ரைனுக்கான அமெரிக்காவின் ஆயுத உதவிகள் திடீர் நிறுத்தம்: டிரம்ப் - ஜெலன்ஸ்கி மோதலை தொடர்ந்து நடவடிக்கை

ஐரோப்பிய தலைவர்களின் அவசர கூட்டம் லண்டனில் நேற்று நடைபெற்றது. இதில் பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

வாஷிங்டன்: உக்ரைனுக்கு வழங்கிய ஆயுத உதவிகளை அமெரிக்கா திடீரென நிறுத்தி உள்ளது. எனினும் பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு தொடர்ந்து ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன.

2022 பிப்ரவரி முதல் ரஷ்யா, உக்ரைன் இடையே போர் நடைபெற்று வருகிறது. அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடன், உக்ரைனுக்கு தேவையான ஆயுத உதவிகளை வழங்கி வந்தார். கடந்த ஜனவரியில் அமெரிக்க அதிபராக பதவியேற்ற ட்ரம்ப், உக்ரைனுக்கான ஆயுத உதவிகளை படிப்படியாக நிறுத்தி வந்தார்.

இந்த சூழலில் கடந்த வெள்ளிக்கிழமை வெள்ளை மாளிகையில் நடைபெற்ற சந்திப்பின்போது அமெரிக்க அதிபர் ட்ரம்ப், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இடையே பகிரங்கமாக மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக உக்ரைனுக்கான ஆயுத உதவிகள் திடீரென நிறுத்தப்பட்டு உள்ளன.

இதுகுறித்து அமெரிக்க அரசு வட்டாரங்கள் கூறியதாவது: அமெரிக்கா சார்பில் சுமார் 71 சரக்கு கப்பல்களில் உக்ரைனுக்கு ஆயுதங்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. ஆயிரக்கணக்கான பீரங்கிகள், ஏவுகணைகள் உக்ரைனுக்கு வழங்கப்பட்டு உள்ளன. தற்போதுவரை உக்ரைனுக்கு ஆயுதங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இருதரப்பு இடையே எந்தவொரு ஒப்பந்தமும் கையெழுத்தாகவில்லை. இதைத்தொடர்ந்து அதிபர் ட்ரம்பின் உத்தரவால் உக்ரைனுக்கான ஆயுத உதவி உடனடியாக நிறுத்தப்பட்டுவிட்டது. வரும் மேமாதம் அமெரிக்காவின் அனைத்து வகையான உதவிகளும் முழுமையாக நிறுத்தப்படும்.இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஐரோப்பிய நாடுகள் அவசர கூட்டம்: அமெரிக்கா கைவிட்ட நிலையில் தற்போது உக்ரைனுக்கு ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. அந்த நாட்டுக்கு தேவையான ஆயுத உதவிகளை பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து வழங்கி வருகின்றன. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி லண்டனில் நேற்று முன்தினம் பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை சந்தித்தார். இதைத் தொடர்ந்து பிரான்ஸ், ஜெர்மனி, டென்மார்க், இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் அவசர கூட்டம் லண்டனில் நேற்று நடைபெற்றது. இதில் ஜெலன்ஸ்கியும் பங்கேற்றார். இந்த கூட்டத்தில் ட்ரம்ப் - ஜெலன்ஸ்கி மோதல் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

கூட்டத்துக்கு முன்பாக பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் கூறும்போது, “பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் இணைந்து புதிய போர் நிறுத்த ஒப்பந்தத்தை தயார் செய்வோம். இதை அமெரிக்காவிடம் சமர்ப்பிப்போம். எங்களை பொறுத்தவரை உக்ரைனின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கிறோம். ஐரோப்பிய நாடுகளின் ராணுவ வீரர்கள் அடங்கிய அமைதிப் படையை உருவாக்குவது குறித்து ஆலோசித்து வருகிறோம்" என்று தெரிவித்தார்.

அமெரிக்கா, ரஷ்யா இடையே சவுதி அரேபிய தலைநகர் ரியாத்தில் அமைதி பேச்சுவார்த்தை தொடங்கிய நாளில் இருந்து போரின் தீவிரம் குறைந்து காணப்பட்டது.தற்போது போர் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. ரஷ்யா, உக்ரைன் எல்லை பகுதிகளில் சுமார் 100 இடங்களில் நேற்று கடுமையான சண்டை நடைபெற்றது. இதில் ரஷ்ய ராணுவத்தின் கை ஓங்கி இருந்தது. ரஷ்ய ராணுவம் சார்பில் சுமார் 3,000 ட்ரோன்கள் மூலம் உக்ரைன் எல்லை பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டன.

ரஷ்யாவில் இருந்து துருக்கிக்கு எரிவாயு கொண்டு செல்லும் 930 கி.மீ. நீளம் கொண்ட துர்க் பைப்லைனை தகர்க்க உக்ரைன் ராணுவம் நேற்று முயற்சி செய்தது. இந்த சதியை முறியடித்துவிட்டதாக ரஷ்ய ராணுவம் அறிவித்துள்ளது. உக்ரைனின் தாக்குதல் முயற்சிக்கு ஹங்கேரி கண்டனம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x