Published : 02 Mar 2025 03:56 AM
Last Updated : 02 Mar 2025 03:56 AM
அமெரிக்க அதிபர் ட்ரம்ப், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இடையிலான சந்திப்பு கடும் வாக்குவாதத்தில் முடிவடைந்தது. உக்ரைன் பிரச்சினைக்கு தீர்வு காண அமெரிக்கா மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிவடைந்தது. இதனால் விருந்து நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு, உக்ரைன் குழு வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற்றப்பட்டது.
ரஷ்யா-உக்ரைன் மோதல் விவகாரத்தில் உக்ரைனுக்கு ஆதரவாகவும், ரஷ்யாவுக்கும் எதிராகவும் அமெரிக்கா கடந்த 3 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. ரஷ்யா ராணுவத்தை எதிர்கொள்ள தேவையான ஆயுதங்களை கொடுத்து உதவியது. இந்நிலையில் அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு டொனால்ட் ட்ரம்ப் அதிபர் ஆனார். உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவேன் என அதிபர் ட்ரம்ப் ஆரம்பத்திலிருந்தே கூறிவந்தார். இதனால் உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்காவின் நிலைப்பாட்டில் தடலாடியாக மாற்றம் ஏற்பட்டது. ரஷ்ய அதிபர் புதினை தொடர்பு கொண்டு அதிபர் ட்ரம்ப் பேசினார்.
இந்நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அமெரிக்கா வர அதிபர் ட்ரம்ப் அழைப்பு விடுத்தார். அதை ஏற்று ஜெலன்ஸ்கி நேற்று முன்தினம் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அதிபர் ட்ரம்ப்பை சந்தித்தார். அப்போது அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் உடன் இருந்தார். வழக்கமான கை குலுக்கல், பாாரட்டுடன் இவர்களது சந்திப்பு தொடங்கியது. உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்யாவுடன் அமைதி பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என்ற வலியறுத்தலுடன் ஜே.டி.வான்ஸ் பேச்சுவார்த்தை தொடங்கினார். ஜே.டி.வான்ஸ் கருத்துக்கு, ஜெலன்ஸ்கி பதில் அளித்து வந்தார். இடையிடையே அதிபர் ட்ரம்ப் குறுக்கிட்டார். படிப்படியாக இந்த பேச்சுவார்த்தை காரசார விவாதமாக மாறியது. ஜே.டி.வான்ஸ், ஜெலன்ஸ்கி, அதிபர் ட்ரம்ப் இடையே நடந்த உரையாடல் விவரம்:
ஜே.டி.வான்ஸ்: நான்கு ஆண்டுகளாக அமெரிக்க அதிபராக இருந்த பைடன், உக்ரைனில் ஊடுருவியதற்காக ரஷ்ய அதிபர் புதினை கடுமையாக விமர்சித்தார். ஆனால், புதின் தொடர் தாக்குதல் நடத்தி உக்ரைனின் பெரும்பகுதியை அழித்துவிட்டார். இனி பேச்சுவார்த்தை மூலம் அமைதிக்கான வழியை காண்பதுதான் சிறந்ததாக இருக்கும்.
ஜெலன்ஸ்கி: உக்ரைனின் பெரும்பகுதியை புதின் ஆக்கிரமித்துவிட்டா். 2014-ம் ஆண்டே அவர் ஆக்கிரமிப்பை தொடங்கிவிட்டார். அமெரிக்க முன்னாள் அதிபர்கள் ஒபாமா, ட்ரம்ப், பைடன் காலத்திலேயே அவர் ஆக்கிரமிப்பை தொடங்கினார். ஆனால் யாரும் அவரை தடுத்து நிறுத்தவில்லை. அவர் உக்ரைன் மக்களை கொன்று எங்கள் நாட்டை ஆக்கிரமித்தார். 2014 முதல் 2022 வரை இதே நிலைதான் இருந்தது. புதினுடன் நாங்கள் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அவர் எங்கள் மீது தாக்குதல் நடத்தினார். நீங்கள் எந்தவிதமான பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கூறுகிறீர்கள்?
ஜே.டி.வான்ஸ்: உங்கள் நாட்டின் அழிவுக்கு முடிவு கட்டும் பேச்சுவார்த்தை பற்றி நான் பேசுகிறேன். நீங்கள் வெள்ளை மாளிகைக்கு வந்து, அமெரிக்க ஊடகத்தின் முன்பு வாக்குவாதத்தில் ஈடுபட முயற்சிப்பதை அவமதிப்பாக நான் கருதுகிறேன். தற்போது, உங்களிடம் ராணுவ பலம் இல்லை. நாங்கள் உங்களுக்கு செய்யும் உதவிக்கு, நீங்கள் அதிபர் ட்ரம்புக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.
ஜெலன்ஸ்கி: நீங்கள் எப்போதாவது உக்ரைன் வந்து அங்கு நிலவும் பிரச்சினைகளை பார்த்திருக்கிறீர்களா?
ஜே.டி.வான்ஸ்: உக்ரைனில் நடைபெறும் சம்பவங்களை எல்லாம் பார்த்து கொண்டுதான் இருக்கிறேன். மக்களை வைத்து பிரச்சாரம் செய்கிறீர்கள். ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பதில் உங்களுக்கு பிரச்சினை உள்ளது. உங்கள் நாட்டின் அழிவை தடுக்க முயற்சிக்கும் அமெரிக்க நிர்வாகத்தை வெள்ளை மாளிகைக்கே வந்து தாக்கிபேசுவதை அவமதிப்பு என நீங்கள் நினைக்கவில்லையா?
ஜெலன்ஸ்கி: போரின்போது எல்லோருக்கும் பிரச்சினை வரும். அமெரிக்காவுக்கு கூட வரும்.
அதிபர் ட்ரம்ப்: தற்போது நல்ல தீர்வுகள் உள்ளன. அது இப்போது உங்களுக்கு தெரியாது. எதிர்காலத்தில் உணர்வீர்கள். பிரச்சினைக்கு தீர்வு காண நாங்கள் முயற்சிக்கிறோம். எங்களுக்கு பிரச்சினை ஏற்படும் என நீங்கள் சொல்லாதீர்கள்.
ஜெலன்ஸ்கி: நான் பதில்தான் கூறுகிறேன்.
அதிபர் ட்ரம்ப்: எங்களுக்கு என்ன ஏற்படும் என்று கூறும் நிலையில் நீங்கள் இல்லை. நாங்கள் நன்றாகத்தான் இருப்போம், வலுவாகத்தான் இருப்போம். மோசமான நிலைக்கு உங்கள் நாடு செல்ல நீங்களே அனுமதித்துள்ளீர்கள். கோடிக்கணக்கான மக்களின் உயிருடன் நீங்கள் விளையாடுகிறீர்கள், மூன்றாம் உலகப்போருடன் நீங்கள் விளையாடுகிறீர்கள். நீங்கள் செய்வது இந்த நாட்டுக்கு மிக அவமதிப்பானது.
ஜே.டி.வான்ஸ்: நீங்கள் ஒருமுறையாவது அமெரிக்காவுக்கு நன்றி கூறினீர்களா?
ஜெலன்ஸ்கி: பல முறை கூறியிருக்கிறேன்.
ஜே.டி.வான்ஸ்: இந்த சந்திப்பில் கூறினீர்களா? உங்கள் நாட்டை காப்பாற்ற முயற்சிக்கும் அமெரிக்காவுக்கும், அதன் அதிபரையும் பாராட்டீனீர்களா?
ஜெலன்ஸ்கி: போரைப் பற்றி சத்தமாக பேசலாம் என நீங்கள் நினைக்கிறீர்கள்.
அதிபர் ட்ரம்ப்: அவர் சத்தமாக பேசவில்லை. உங்கள்நாடுதான் பெரும் பிரச்சினையில் உள்ளது. நீங்கள் அதிகம் பேசிவிட்டீர்கள். அமெரிக்க ராணுவ உதவிமட்டும் உங்களுக்கு கிடைக்காமல் இருந்திருந்தால், இந்தப்போர் 2 வாரத்தில் முடிந்திருக்கும்.
ஜெலன்ஸ்கி: 3 நாளில் முடிந்திருக்கும் என புதின் கூட கூறியதாக கேள்விபட்டேன்.
அதிபர் ட்ரம்ப்: அமெரிக்க உதவி காரணமாக்தான், நீங்கள் இவ்வளவு காலம் தாக்குபிடித்தீர்கள், அமெரிக்கா இல்லையென்றால், உங்களால் தாக்குபிடித்திருக்க முடியாது. நீங்கள் வாக்குவாதம் செய்துகொண்டிருந்தால் கஷ்டம்தான். உங்கள் மக்கள் எல்லாம் போரில் இறந்து கொண்டிருக்கிறார்கள். போரிட வீரர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது. ஆனால், போர் நிறுத்தத்தை விரும்ப வில்லை, போர் நிறுத்தத்தை விரும்பவில்லை என நீங்கள் கூறிக்கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் நன்றியுடன் செயல்படவில்லை. இது நல்லதல்ல.
இவ்வாறு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப், துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் இடையே 40 நிமிடங்களுக்கு மேலாக காரசார விவாதம் நடைபெற்றது.
விருந்து ரத்து: அதன்பின் அதிபர் ட்ரம்ப் பேச்சுவார்த்தையை முடித்துக் கொண்டு புறப்பட்டார். அதிபர் ஜெலன்ஸ்கியும் வெளியேறினார். இந்த சந்திப்புக்குப்பின் பத்திரிக்கையாளர் சந்திப்பு, மதிய விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் எதுவும் நடைபெறவில்லை. உக்ரைன் குழுவினர் வெள்ளை மாளிகையைவிட்டு வெளியேறும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
மீண்டும் வரலாம்: அதன்பின் சமூக ஊடகத்தில் அதிப்ர் ட்ரம்ப் வெளியிட்ட செய்தியில், ‘‘ ஜெலன்ஸ்கி அமெரிக்காவை அவமதித்து விட்டார். அமைதி பேச்சுவார்த்தைக்கு ஜெலன்ஸ்கி தயாராக இருக்கும்போது அவர் மீண்டும் வரலாம். ’’ என குறிப்பிட்டார்.
மன்னிப்பு கேட்க முடியாது: இந்த காரசார விவாதத்துக்காக அதிபர் ட்ரம்பிடம், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மன்னிப்பு கேட்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ கூறினார். ஆனால், அதிபர் ட்ரம்பிடம் மன்னிப்பு கேட்க ஜெலன்ஸ்கி மறுத்துவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT