Published : 27 Feb 2025 04:45 AM
Last Updated : 27 Feb 2025 04:45 AM
வாஷிங்டன்: அமெரிக்காவில் பணக்காரர்கள் நிரந்தரமாக வசிப்பதற்கு தங்க அட்டை எனும் " கோல்டு கார்டு" திட்டத்தை அறிமுகம் செய்ய அதிபர் டொனால்டு ட்ரம்ப் முடிவு செய்துள்ளார். இந்த " கோல்டு கார்டு" விலை 5 மில்லியன் டாலராக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இது ரூ.43 கோடி ரூபாய் ஆகும்.
இதுகுறித்து அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளதாவது: தற்போதுள்ள "இபி-5” புலம்பெயர் முதலீட்டாளர் விசா திட்டம் மாற்றியமைக்கப்படுகிறது. அமெரிக்காவில் வேலைகளை உருவாக்கும் அல்லது முதலீடு செய்யும் வெளிநாட்டு பணக்கார முதலீட்டாளர்கள் " கோல்டு கார்டு" வசதியை பெறுவதன் மூலம் அவர்கள் அமெரிக்காவில் நிரந்தர குடியிருப்பாளர்களாக மாற அனுமதிக்கிறது.
தற்போது நாங்கள் கொண்டு வர உள்ள கோல்டு கார்டின் விலை 5 மில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும். இந்த திட்டம் குறித்து இன்னும் அதிகமான தகவல்கள் இன்னும் இரண்டு வாரங்களுக்குள் வெளியாகும்.
இந்த அட்டை கிரீன் கார்டுகளுக்கு நிகரான சலுகைகளை வழங்கும். மேலும், இது அமெரிக்க குடியுரிமைக்கான பாதையாகவும் இருக்கும். மேலும், இந்த அட்டையை வாங்குவதன் மூலம் அதிக பணக்காரர்கள் அமெரிக்காவுக்கு எளிதான முறையில் வரமுடியும். இந்த பணத்தைக் கொண்டு நாட்டின் கடனை விரைவாக அடைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில் ரஷ்யர்கள் தகுதி பெறுவார்களா என்ற கேள்வி செய்தியாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. எனக்கு தெரிந்த நல்ல பணக்காரர்கள் ரஷ்யாவிலும் உள்ளனர். அவர்களும் தங்க அட்டையை பெறுவது சாத்தியம்தான். இவ்வாறு ட்ரம்ப் தெரிவித்தார்.
"இபி-5 திட்டம் முட்டாள்தனமானது. மோசடி நிறைந்தது. குறைந்த விலையில் கிரீன் கார்டை பெறுவதற்கான குறுக்கு வழியாக உள்ளது. எனவேதான் இந்த அபத்தமான இபி-5 திட்டத்தை கைவிட ட்ரம்ப் முடிவெடுத்துள்ளார். அதற்கு மாற்றாக அவர் "கோல்டு கார்டை" கொண்டு வரவுள்ளார்" என்று வர்த்தக அமைச்சர் ஹேவர் லுட்நிக் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT