Published : 24 Feb 2025 12:32 PM
Last Updated : 24 Feb 2025 12:32 PM
போப் பிரான்சிஸ் இன்னும் கவலைக்கிடமான நிலையில்தான் இருக்கிறார் என்று வாடிகன் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வாடிகன் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் “போப் பிரான்சிஸ்க்கு அதிக அழுத்த ஆக்ஸிஜன் சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் ரத்த மாற்று சிகிச்சையும் நடைபெற்றது. ரத்தப் பரிசோதனைகளில் அவருக்கு லேசான ஆரம்பகட்ட சிறுநீரக பிரச்சினை இருப்பது தெரியவந்துள்ளது. தற்போது அது கட்டுப்பாட்டில் உள்ளது. மருத்துவர்கள் தொடர்ந்து விழிப்புடன் அவரை கண்காணித்து வருகின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கத்தோலிக்க கிறிஸ்தவ மத தலைவரான போப் பிரான்சிஸ் (88) சுவாசப் பிரச்சினை காரணமாக கடந்த 14-ம் தேதி ரோம் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சுவாச பாதையில் தொற்று ஏற்பட்டு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தீவிர சிகிச்சை பெற்று வந்த போப் பிரான்சிஸ்க்கு கடந்த சனிக்கிழமை ஆஸ்துமா பாதிப்பு அதிகரித்தது.
ரத்தத்தில் பிளேட்லெட் எண்ணிக்கை குறைந்ததால் அவருக்கு ரத்த மாற்று சிகிச்சையும் நடைபெற்றது. இந்த சிகிச்சைக்குப் பின் கடந்த சனிக்கிழமை அன்று மருத்துவமனையில் போப் பிரான்சிஸ் அமைதியான இரவை கழித்தார் என வாடிகன் செய்தி தொடர்பாளர் மேட்டியோ ப்ரூனி தெரிவித்தார். உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ மக்கள் போப் உடல்நலம் பெற்று மீண்டு வர பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT