Published : 23 Feb 2025 03:01 PM
Last Updated : 23 Feb 2025 03:01 PM
வாஷிங்டன்: "நான்(ஜியார்ஜியா மெலோனி), இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அர்ஜெண்டினா அதிபர் சேவியர் மிலே ஆகியோர் உலக அளவில் ஒரு புதிய பழமைவாத இயக்கத்தை கட்டமைத்து வழிநடத்தி வருகிறோம் இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி தெரிவித்துள்ளார்.
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடந்த பழமைவாத அரசியல் செயல்பாடுகள் மாநாட்டில் காணொலி வாயிலாக மெலோனி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், "டொனால்ட் ட்ரம்பின் வெற்றியால் இடதுசாரிகள் பதற்றமடைந்துள்ளனர். அவர்களின் எரிச்சல் வெறியாக மாறியுள்ளது. பழமைவாத தலைவர்கள் தொடர்ந்து வெற்றி பெற்று சர்வதேச அளவில் ஒத்துழைத்து பணியாற்றி வருவதால் அவர்கள் கவலையடைந்துள்ளனர். கடந்த 90-களில் பில் கிளிண்டன் (முன்னாள் அமெரிக்க அதிபர்), டோனி பிளேர் (இங்கிலாந்து பிரதமர்) இணைந்து சர்வதேச அளவில் ஒரு இடதுசாரி வலையமைப்பை உருவாக்கிய போது அவர்கள் ராஜதந்திரிகள் என்று அழைக்கப்பட்டனர்.
தற்போது ட்ரம்ப், மெலோனி, மிலே, மோடி பேசும் போது அது ஜனநாயகத்துக்கான அச்சுறுத்தல் என்று அவர்கள் கூறுகிறார்கள். இது இடதுசாரிகளின் சமீபத்திய இரட்டை நிலைப்பாடு. நாம் இதற்கு பழகிவிட்டோம். இதில் மிகவும் நல்ல விஷயம் என்னவென்றால், மக்கள் இனியும் அவர்களின் பொய்களை நம்பப்போவதில்லை. அவர்கள் நம் மீது வீசிய சேறுகளை அகற்றி மக்கள் நம்மை வெற்றி பெறச் செய்கின்றனர்.
நாம் சுதந்திரத்தை பாதுகாக்கிறோம். நமது நாடுகளை நேசிக்கிறோம். நாட்டின் எல்லைகளை பாதுகாக்க விரும்புகிறோம். நாட்டின் குடிமக்களையும் வணிகங்களையும் பாதுகாக்கிறோம். குடும்ப வாழ்வினை பாதுகாக்கிறோம். நமது நம்பிக்கைள் மற்றும் பேச்சு சுதந்திரத்துக்கான உரிமைகளை பாதுகாக்கிறோம். இறுதியாக நமது போராட்டம் கடினமானது ஆனால் தேர்ந்தெடுப்பதற்கு மிகவும் எளிமையானது.
மகிழ்ச்சி என்பது சுதந்திரத்தைச் சார்ந்தது, சுதந்திரம் என்பது தைரியத்தைச் சார்ந்தது. நாம் படையெடுப்புகளை தடுத்து நிறுத்தி, நமது சுதந்திரங்களை வென்று, சர்வாதிகாரத்தை தூக்கியெறிந்து அதனை நிரூபித்திருக்கிறோம். கடந்த மூன்று ஆண்டுகளாக உக்ரைனில் அதனைத் தான் ஒன்றிணைந்து செய்தோம். அங்குள்ள பெருமைமிகு மக்கள் தங்கள் மீதான ஆக்கிரமிப்பை எதிர்த்து போராடி வருகின்றனர்.
அதனை நாம் இன்றும் தொடர வேண்டும். அனைவரின் பங்களிப்பாலும் எல்லாவற்றுக்கும் மோலாக வலிமையான தலைமைகளால் மட்டுமே கட்டமைக்கக்கூடிய ஒரு நீடித்த அமைதிக்காக ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும். நான் எனது தேர்வை நீண்ட காலத்துக்கு முன்பே எடுத்துவிட்டேன். அதற்காக தினமும் போராடுகிறேன். இந்தப் போராட்டத்தில் நான் தனித்து இல்லை என்பதை நான் அறிவேன். நீங்கள் அனைவரும் என்னுடன் உள்ளீர்கள். என்னை நம்புங்கள் இது அனைத்தையும் உருவாக்கும்" என தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT