Published : 22 Feb 2025 12:44 PM
Last Updated : 22 Feb 2025 12:44 PM
வாஷிங்டன்: அமெரிக்க விமானப்படை ஜெனரலாக இருந்த சார்லஸ் கியூ பிரவுன் பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். சார்லஸ் கியூ பிரவுன் மீதான நடவடிக்கைக்கு முக்கிய காரணம், அவர் கறுப்பின மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்ததுதான் என்று கூறப்படுகிறது.
அமெரிக்காவின் அதிபராக ட்ரம்ப் பதவி ஏற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்நிலையில், அமெரிக்க ராணுவத்தின் விமானப்படை ஜெனரலாக இருந்த சார்லஸ் கியூ பிரவுன் பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். அமெரிக்க ராணுவத்தின் கூட்டு பணியாளர்களின் தலைவர் ஜெனரலாக இவர் பதவி வகித்து வந்தார். இந்தப் பதவியை வகித்த இரண்டாவது கறுப்பின நபர் இவர்தான் என்பது மிக முக்கியமானது.
மேலும், தனது சமூக வலைதளப் பக்கத்தில் ட்ரம்ப், “ஜெனரல் சார்லஸ் கியூ பிரவுன் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேல் இந்த நாட்டுக்காக சேவையாற்றி உள்ளார். இந்நேரத்தில் நான் அவருக்கு நன்றி கூற விரும்புகிறேன். அவர் ஒரு சிறந்த தலைவர் மட்டுமல்ல, சிறந்த மனிதரும் கூட. அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் சிறந்த எதிர்காலம் அமைய வாழ்த்துகிறேன்" என்றுப் பதிவிட்டுள்ளார்.
தற்போது, சார்லஸ் கியூ பிரவுனின் பொறுப்புக்கு, ஓய்வுபெற்ற விமானப்படை லெப்டினன்ட் ஜெனரல் டான் ரஸின் கெய்னை ட்ரம்ப் பரிந்துரை செய்திருக்கிறார். கெய்ன் ஒரு திறமையான விமானி, தேசிய பாதுகாப்பு நிபுணர், சிறந்த தொழில்முனைவோர் மற்றும் அனுபவமுள்ள போர்வீரர் என ட்ரம்ப் புகழாரம் சூட்டியுள்ளார். சார்லஸ் கியூ பிரவுன், செப்டம்பர் 2027 வரை பணியாற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனிடையே, சார்லஸ் கியூ பிரவுன் பணிநீக்கம் செய்யப்பட முக்கிய காரணம், அவர் கறுப்பின மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதுதான் என்று கூறப்படுகிறது.
அதைத் தொடர்ந்து ட்ரம்ப்பின் நிர்வாகம், அமெரிக்க கடற்படைத் தளபதி மற்றும் விமானப்படை துணைத் தளபதி ஆகியோரை பணிநீக்கம் செய்ததாக கூறப்படுகிறது. ட்ரம்ப்பின் பாதுகாப்பு செயலாளர் பீட் மற்றும் ஜெனரல் கெய்னும் அமெரிக்காவை முதன்மைப்படுத்துவார்கள், நமது ராணுவத்தை மீண்டும் கட்டியெழுப்புவார்கள் எனத் தெரிவித்துள்ளார். பிரவுனின் பதவி நீக்கம் பென்டகனில் பெரியப் பிரச்சினைகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT