Published : 20 Feb 2025 04:48 PM
Last Updated : 20 Feb 2025 04:48 PM
பனாமா சிட்டி: அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டு பனாமா வந்துள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருப்பதாக பனாமாவுக்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பனாமா, நிகராகுவா, கோஸ்டா ரிகா ஆகிய நாடுகளுக்கான இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "அமெரிக்காவில் இருந்து பனாமா வந்துள்ள இந்தியர்கள் அனைத்து அத்தியாவசிய வசதிகளையும் கொண்ட ஒரு ஹோட்டலில் பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் தங்க வைக்கப்பட்டிருப்பதாக பனாமா அதிகாரிகள் எங்களுக்குத் தெரிவித்துள்ளனர். தூதரக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவர்களின் நலனை உறுதி செய்வதற்காக நாங்கள் பனாமா அரசுடன் நெருக்கமாகப் பணியாற்றி வருகிறோம்," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, பனாமா ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டுள்ள நாடு கடத்தப்பட்டவர்கள், ஹோட்டலின் ஜன்னல் வழியாக உதவி கோரி கதறும் வீடியோ பதிவு வெளியானது. இதனிடையே, விருப்பத்துக்கு மாறாக அவர்கள் தடுப்புக் காவலில் சிறை வைக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளை பனாமா மறுத்துள்ளது.
இது தொடர்பாக பேசிய பனாமாவின் பாதுகாப்பு அமைச்சர் பிராங்க் அப்ரேகோ, “பனாமாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இடம்பெயர்வோர் தொடர்பான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, அமெரிக்காவில் இருந்து வந்த இந்த சட்டவிரோத குடியேறிகளுக்கு ஹோட்டலில் மருத்துவ உதவியும், உணவும் வழங்கப்பட்டு வருகிறது. இவர்கள் தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்ப சர்வதேச அதிகாரிகள் ஏற்பாடு செய்யும் வரை, அவர்கள் ஹோட்டலை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவதில்லை” என தெரிவித்துள்ளார்.
தங்கள் நாட்டில் சட்டவிரோதமாக தங்கி இருக்கும் வெளிநாட்டவர்களை அவர்களின் சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்ப பனாமா, கோஸ்டா ரிகா போன்ற நாடுகளை அமெரிக்கா பயன்படுத்த தொடங்கி இருக்கிறது. அந்த அடிப்படையில் ஈரான், இந்தியா, நேபாளம், இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 300 பேர் தற்போது அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டு பனாமாவில் தங்கவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT