Published : 16 Feb 2025 04:55 AM
Last Updated : 16 Feb 2025 04:55 AM
வாஷிங்டன்: சர்வதேச நீர்வரைவியல் அமைப்பு (ஐஎச்ஓ) கடல்கள் மற்றும் பெருங்கடல்களுக்கு பெயர் சூட்டுகிறது. ஏதாவது ஒரு கடல் பகுதியின் பெயரை மாற்ற சம்பந்தப்பட்ட நாடுகளின் ஒருமித்த கருத்து அவசியம். அதன் அடிப்படையில் மட்டுமே ஐஎச்ஓ அமைப்பு கடல் பகுதிகளின் பெயர்களை மாற்றும்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தன்னிச்சையாக அமெரிக்க வளைகுடா என்று பெயரிட்டுள்ளார். இதை மெக்ஸிகோ அரசு ஏற்கவில்லை.
இந்த சூழலில் சர்வதேச அளவில் 'மெக்ஸிகோ வளைகுடா' என்றும் அமெரிக்காவில் மட்டும் 'அமெரிக்க வளைகுடா' என்றும் சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டு வருகின்றன.
அமெரிக்காவின் நியூயார்க் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அசோசியேட்டட் பிரஸ் (ஏபி) செய்தி நிறுவனம், இன்றுவரை தனது செய்திகளில் 'மெக்ஸிகோ வளைகுடா' என்று மட்டுமே குறிப்பிடுகிறது. இதற்கு அமெரிக்க அதிபர் மாளிகை கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. அதோடு அமெரிக்க அதிபர் மாளிகையில் ஏபி செய்தி நிறுவனத்தின் செய்தியாளர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இந்த சூழலில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று வாஷிங்டனில் இருந்து ஏர்போர்ஸ் ஒன் விமானத்தில் புளோரிடா சென்றார். அவரது விமானத்தில் செய்தியாளர்கள் பயணம் செய்வது வழக்கம். இதன்படி ஏபி நிறுவன செய்தியாளர், புகைப்பட நிபுணர் ஆகியோர் ட்ரம்பின் விமானத்தில் ஏற சென்றனர். ஆனால் இருவருக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. அவர்கள் ஏர்போர்ஸ் ஒன் விமானத்தில் ஏற அனுமதிக்கப்படவில்லை. இதற்கு ஊடக அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
வெள்ளை மாளிகை செய்தியாளர் கூட்டமைப்பின் தலைவர் யூஜின் டேனியல்ஸ் கூறும்போது, “எவ்வாறு செய்தி வெளியிட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் மாளிகை உத்தரவிட முடியாது. பத்திரிகை சுதந்திரத்தை மதித்து நடக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
அமெரிக்காவின் தனிநபர் உரிமை அறக்கட்டளையின் தலைவர் ஆரோன் கூறும்போது, “வெள்ளை மாளிகையின் ஊதுகுழலாக ஊடகங்கள் செயல்பட முடியாது. தனிநபர், ஊடகங்களின் சுதந்திரத்துக்கு அமெரிக்க அரசு மதிப்பு அளிக்க வேண்டும். ஏபி செய்தியாளர்களை அமெரிக்க அதிபர் மாளிகை புறக்கணிப்பது கண்டிக்கத்தக்கது" என்று தெரிவித்துள்ளார்.
ஏபி நிறுவன செய்தித் தொடர்பாளர் லாரன் ஈஸ்டன் கூறும்போது, “அமெரிக்க அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக அதிபர் மாளிகை செயல்படுகிறது. நாங்கள் சர்வதேச ஊடகம். எங்களது கொள்கையின்படி மெக்ஸிகோ வளைகுடா என்று செய்திகளில் குறிப்பிடுகிறோம். அதேநேரம் அமெரிக்க எல்லைக்கு உட்பட பகுதியில் பல்வேறு பெயர் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. அதை நாங்கள் ஏற்றுக் கொண்டு, புதிய பெயர்களை மட்டுமே செய்திகளில் குறிப்பிடுகிறோம். அதிபர் மாளிகையின் நிலைப்பாட்டை மாற்ற வேண்டுகிறோம்" என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT