Published : 16 Feb 2025 04:01 AM
Last Updated : 16 Feb 2025 04:01 AM
வாஷிங்டன்: அமெரிக்காவில் கல்வி பயிலும் இந்திய மாணவர்களால் அந்த நாட்டுக்கு ஆண்டுதோறும் ரூ.69,000 கோடி வருவாய் கிடைக்கிறது.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை, பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் சந்தித்துப் பேசினார். இதன்பிறகு கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அதில், “அமெரிக்கா முழுவதும் சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். அவர்கள் மூலம் அமெரிக்காவுக்கு ஆண்டுதோறும் ரூ.69,000 கோடி வருவாய் கிடைக்கிறது. இந்திய மாணவர்களால் அமெரிக்காவில் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாகி உள்ளன" என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
15 லட்சம்: இதுகுறித்து இந்திய கல்வியாளர்கள் கூறியதாவது: அமெரிக்காவின் 50 மாகாணங்களில் உள்ள சுமார் 4,000-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களில் சுமார் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டு மாணவர்கள் கல்வி பயில்கின்றனர்.
அமெரிக்காவில் கல்வி பயிலும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையில் சீனர்கள் முதலிடத்தில் இருந்தனர். கரோனா பெருந்தொற்று, அமெரிக்கா-சீனா இடையிலான உறவில் விரிசல் உள்ளிட்ட காரணங்களால் கடந்த சில ஆண்டுகளில் சீன மாணவ, மாணவியரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருக்கிறது.
இந்தியர்களே அதிகம்: தற்போதைய நிலையில் இந்திய மாணவ, மாணவியரே அமெரிக்க கல்வி நிறுவனங்களில் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய மாணவ, மாணவியர் அமெரிக்காவில் கல்வி பயின்று வருகின்றனர். இவர்களின் மூலம் அமெரிக்காவுக்கு ஆண்டுக்கு ரூ.69,000 கோடி வருவாய் கிடைப்பதாக அந்த நாட்டு அரசு கணக்கிட்டு உள்ளது. ஆனால் இந்திய மாணவர்களால் அமெரிக்காவுக்கு ஆண்டுதோறும் ரூ.1,213,35 கோடி வரை வருவாய் கிடைக்கிறது என்று தனியார் பொருளாதார வல்லுநர்கள் கணித்து உள்ளனர்.
அமெரிக்க கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்களில் மிகச் சிறப்பாக செயல்படும் இந்திய மாணவ, மாணவியரை அந்த நாட்டு அரசு தக்க வைத்து கொள்கிறது. அவர்கள் அமெரிக்காவின் விண்வெளி, செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்ப துறைகளின் வளர்ச்சிக்கு மிக முக்கிய பங்காற்றி வருகின்றனர்.
உயர் பதவி: அமெரிக்காவின் ஆல்பாபெட் குழும தலைமை செயல் அதிகாரியாக சுந்தர் பிச்சை, மைக்ரோசாப்ட் தலைமை செயல் அதிகாரியாக சத்ய நாதெள்ள, யூ டியூப் தலைமை செயல் அதிகாரியாக நீல் மோகன், அடோபி தலைமை செயல் அதிகாரியாக சாந்தனு நாராயண், உலக வங்கி தலைவராக அஜய் பங்கா உள்ளிட்டோர் பணியாற்றுகின்றனர். இவர்கள் உட்பட அமெரிக்காவின் பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்களாக இந்திய வம்சாவளியினரே பதவி வகிக்கின்றனர். இந்தியர்களின் அறிவால், ஆற்றலால் அமெரிக்கா அபரிதமாக வளம் அடைந்து வருகிறது. இவ்வாறு இந்திய கல்வியாளர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT