Published : 13 Feb 2025 03:02 PM
Last Updated : 13 Feb 2025 03:02 PM

இலங்கை காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தில் இருந்து அதானி நிறுவனம் விலகல்

அதானி | கோப்புப்படம்

கொழும்பு: வடக்கு இலங்கை பகுதியில் தொடங்கப்பட உள்ள புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்துக்கு அனுமதி வழங்குவது, அதன் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து சட்டப்போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில் அத்திட்டத்தில் இருந்து அதானி க்ரீன்ஸ் நிறுவனம் விலகியுள்ளது.

உள்ளூர் ஆய்வுகள் மற்றும் விமர்சனங்களைத் தொடர்ந்து இந்தியாவுக்கு வெளியே அண்டைநாட்டில் அதானி நிறுவனம் மேற்கொண்ட முதலீட்டில் இருந்து பின்வாங்கி இருப்பதை நிறுவனத்தின் இந்த முடிவு சுட்டிக்காட்டுகிறது. அதானி குழுமத்தின் இந்த முடிவு இலங்கையின் அதிபர் அனுர குமார திசாநாயக்கவுக்கான வெற்றியாக கருதப்படுகிறது. கடந்த 2024-ம் செப்டம்பரில் நாட்டின் உயர் பதவிக்கு அவர் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பாக, இந்த திட்டத்தை ரத்து செய்வேன் என்று சபதம் செய்திருந்தார். என்றாலும், அவரது அரசு அமைந்ததும், திட்டத்தை மறுபரிசீலனை செய்யும் விருப்பத்தை வெளிப்படுத்தியிருந்தது.

திட்டத்தில் இருந்து விலகுவது குறித்து அதானி குழுமம் பிப்.,12ம் தேதி வெளியிட்டிருக்கும் கடிதத்தில், "புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்தினை மறுபரிசீலனை செய்வதற்கு ஒரு குழுவினை இலங்கை அரசு நியமித்துள்ள நிலையில், இலங்கையின் இறையாண்மை மற்றும் அதன் விருப்பத்துக்கு மதிப்பு அளிக்கும் வகையில், ஏற்கனவே கூறப்பட்ட திட்டத்தில் இருந்து விலகிக்கொள்ள அதானி குழுமம் முடிவு செய்துள்ளது.

இலங்கையின் வடக்கு பகுதி நகரங்களான மன்னார் மற்றும் பூனேரின் ஆகிய பகுதிகளில் 484 மெகா வாட் அளவு புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை உருவாக்கும் வகையில் காற்றாலை பண்ணைகளை உருவாக்கும் வகையில் சிலோன் மின்சாரவாரியத்துடன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நீடித்த விவாதங்கள் நடத்தப்பட்டது. தானே உருவாக்கி இயக்கும் (build-own-operate) இந்த திட்டத்துக்கு சுமார் ரூ.1 பில்லியன் டாலர் முதலீடு தேவைப்படும்" என்று அதானி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, இலங்கை துறைமுக ஆணையம் மற்றும் ஜான் கீல்ஸ் ஹோல்டிங் ஆகியவைகளுடன் இணைந்து அதானி குழுமம், இலங்கை துறைமுகத்தில் மேற்கு கண்டெய்னர் முனையம் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளத குறிப்பிடத்தக்கது.

கடந்த 2022 - ம் ஆண்டு கோதபய ராஜபக்ச இலங்கை அதிபராக இருந்த போது இலங்கையின் வடக்குப்பகுதியில் தொடங்கப்பட இருந்த காற்றாலை திட்டம், எந்த விதமான போட்டியாளரும் இன்றி அதானி நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வந்த ரணில் விக்ரமசிங்கே அரசும் அந்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்தை முன்னெடுத்தது.

இதனிடையே, இலங்கையின் எரிசக்தி துறைக்குள் அதானி நிறுவனம் பின்வாசல் வழியாக நுழைந்து விட்டது என்று எதிர்த்கட்சிகள் குற்றஞ்சட்டின. அதேபோல் மன்னார் பகுதிவாசிகள் மற்றும் செயல்பாட்டாளர்கள், முக்கியமான பறவைகள் சரணாலயம் மற்றும் பிற சுற்றுச்சூழல் இடர்பாடுகளை சுட்டிக்காட்டி, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x