Published : 10 Feb 2025 10:53 AM
Last Updated : 10 Feb 2025 10:53 AM
வாஷிங்டன்: இறக்குமதியாகும் இரும்பு, அலுமினியத்துக்கு 25% வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். டொனால்டு ட்ரம்ப் அமெரிக்க அதிபரான நாள் முதலே பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதுவும் குறிப்பாக வரி விதிப்புகள் மூலம் அவர் புதிய வர்த்தகப் போரை உலக நாடுகள் மீது கட்டவிழ்த்துள்ளார் என்ற விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. மேலும், ட்ரம்ப்பின் வரி விதிப்பு தொடர்பான அறிவிப்புகளின் எதிரொலியாக உலக நாடுகளின் நாணயங்கள் பல மதிப்பு குறைவது, தங்கம் விலை உயர்வவது போன்ற பல்வேறு தாக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன.
முன்னதாக மெக்சிகோ மற்றும் கனடாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 25 சதவீதமும், சீனா பொருள்களுக்கு 10 சதவீதமும் வரி விதிப்பு பிப்ரவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று ட்ரம்ப் தெரிவித்திருந்தார். மெக்சிகோவும் கனடாவும் கடைசி நேரத்தில் புலம்பெயர்வு மற்றும் ஃபெண்டனில் போதைப் பொருள் கடத்தலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கும் வரை இந்த நடவடிக்கைத் தொடரும் என்று தெரிவித்திருந்தார். ஆனால் கனடாவும், மெக்சிகோவும் கடைசிநேரத்தில் ட்ரம்ப் கோரிய நடவடிக்கைகளுக்கு உத்தரவாதம் அளித்த நிலையில் வரி விதிப்புக்கு ஒரு மாத காலம் தற்காலிக தடை விதித்தார்.
ஆனால், தற்போது திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமையன்று (பிப்.10 அல்லது பிப்.11) இரும்பு, அலுமினியம் பொருட்கள் மீதான இறக்குமதி வரி விதிப்பு குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகும் என ட்ரம்ப் கூறியுள்ளார். இரும்பு, அலுமினிய இறக்குமதிக்கு தலா 25 சதவீதம் வரை வரி விதிக்கப்படக் கூடும் என்று ட்ரம்ப் ஓர் எச்சரிக்கையையும் விடுத்துள்ளார்.
ஃப்ளோரிடாவில் இருந்து நியூ ஆர்லியன்ஸுக்கு செல்லும் வழியில் அமெரிக்க அதிபரின் அதிகாரபூர்வ விமானமான ஏர் ஃபோர்ஸ் ஒன்றில் இருந்தபடி அவர் அளித்தப் பேட்டியில் இதனை அவர் கூறியுள்ளார்.
“அமெரிக்க பொருட்களுக்கு பிற நாடுகள் உயர்ந்த வரியை விதித்தால் அமெரிக்காவும் அதிக இறக்குமதி வரி விதிக்கும். சில நாடுகள் நமது பொருட்களுக்கு 130 சதவீதம் வரி விதிக்கின்றன. அவர்களுக்கு நாம் பதில்வரி விதிக்காவிட்டால் அது நியாயமானதாக இருக்காது அல்லவா?. இறக்குமதி வரிகள், அரசாங்கத்தின் பட்ஜெட் பற்றாக்குறையை ஈடுசெய்ய உதவும் வருவாய் ஆதாரமாக இருக்கும். எனவே அமெரிக்காவுக்குள் வரும் இரும்பு, அலுமினியத்துக்கு தலா 25 சதவீதம் வரி விதிக்கப்படலாம். இது தொடர்பான அறிவிப்பு பிப்.10 அல்லது 11-ல் வெளியாகும். ஒரு பக்கம் வரி அதிகம், மறு பக்கம் வரி குறைவு என்ற போக்கெல்லாம் வேண்டாம். அவர்கள் வரி விதித்தால்; நாமும் வரி விதிப்போம்.” என்றார்.
ட்ரம்ப்பின் வரி விதிப்பு அறிவிப்புகளால் அமெரிக்க பங்குச்சந்தைகள் வீழ்ச்சி கண்டுள்ளன. மேலும், இறக்குமதி வரிவிதிப்புகளால் அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரிக்கும் என்று பொருளாதார நிபுணர்களால் கணிக்கப்படுகிறது. ஆனால், ட்ரம்ப் கடந்த ஆட்சியை காட்டிலும் இந்த முறை வரி விதிப்புகள் கடுமையை காட்டி வருகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT