Published : 07 Feb 2025 12:06 PM
Last Updated : 07 Feb 2025 12:06 PM

அதிபர் ட்ரம்புக்கு ‘கோல்டன் பேஜர்’ பரிசளித்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!

கோப்புப்படம்

நியூயார்க்: அமெரிக்காவுக்கு சென்ற இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு ‘கோல்டன் பேஜர்’ ஒன்றை பரிசளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது கடந்த ஆண்டு லெபனான் நாட்டில் ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் மேற்கொண்ட பேஜர் தாக்குதலை சுட்டும் வகையில் அமைந்துள்ளது.

வெட்டப்பட்ட மரத்தில் ட்ரம்புக்கு பரிசளித்த பேஜர் வைக்கப்பட்டுள்ளது. அதில் ‘பிரஸ் வித் போத் ஹேண்ட்ஸ்’ என்ற மெசேஜ் இருக்கிறது. அதன் கீழே ‘எங்களின் தலைசிறந்த நண்பர் மற்றும் சிறந்த கூட்டாளியுமான அதிபர் டொனால்ட் ஜே.ட்ரம்புக்கு, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதை பெற்றுக் கொண்ட அதிபர் ட்ரம்ப், ‘அது சிறந்த ஆபரேஷன்’ என இஸ்ரேலின் லெபனான் பேஜர் தாக்குதலை புகழும் வகையில் கருத்து தெரிவித்ததாக அமெரிக்க ஊடக நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. மேலும், ட்ரம்ப் தரப்பில் புகைப்படம் ஒன்று நெதன்யாகுவுக்கு பரிசளிக்கப்பட்டுள்ளது. அதில் ‘சிறந்த தலைவர்’ என எழுதப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபராக இரண்டாவது முறை ட்ரம்ப் கடந்த மாதம் பதவியேற்ற நிலையில், அவரை சந்தித்த முதல் வெளிநாட்டு தலைவராக நெதன்யாகு அறியப்படுகிறார். இருவரும் அமெரிக்க அதிபரின் அலுவலகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை சந்தித்தனர். இஸ்ரேல் - ஹமாஸ், இஸ்ரேல் - ஹிஸ்புல்லா, ஈரான் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இருவரும் பேசினர்.

இந்த சந்திப்புக்கு பிறகு, ‘‘காசா பகுதியை அமெரிக்கா கைப்பற்றி சீரமைக்கும். அங்கு வசிக்கும் பாலஸ்தீனர்கள் வேறு நாடுகளில் குடியேற வேண்டும்’’ என்ற அதிர்ச்சி அறிவிப்பை அதிபர் ட்ரம்ப் அறிவித்தார்.

பேஜர் தாக்குதல்: லெபனானில் கடந்த ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்திய ஆயிரக்கணக்கான பேஜர்கள் ஒரே நேரத்தில் வெடித்து சிதறின. அதற்கு அடுத்த நாளே அவர்கள் பயன்படுத்திய வாக்கி-டாக்கிகள் வெடித்துச் சிதறின. இந்த ‘டிவைஸ் வெடிப்புத் தாக்குதல்’ சம்பவங்களில் சுமார் 42 பேர் உயிரிழந்தனர்; ஏறத்தாழ 3,000 பேர் காயமடைந்தனர். இந்தச் சதிச் செயலில் இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட்டின் சதி இருப்பது தெரியவந்தது. இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையே போர் நிறுத்தம் ஒப்பந்தமானது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x